சான்றோர்களும் சாமான்யர்களும் இடையே இலக்கியவாதிகளும்

சில நாட்களுக்கு முன்பு பெல்ஜியத்தில் லூவன் நகர மையத்திலுள்ள உணவகம் ஒன்றில் நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது ஒரு நண்பர், “இலக்கியப் புத்தகங்களை எதற்கு வாசிக்க வேண்டும், மாதவன்? இலக்கியவாதிகள் செய்வதையெல்லாம் பார்ப்பதற்கு சிறுபிள்ளைத்தனமாக இருக்கிறது. அதுவும் அரசியலில் இருக்கும் இலக்கியவாதிகளின் அயோக்கியத்தனங்களைப் பார்க்கும்போது, இவர்களிடமிருந்து எனக்கு கற்றுக் கொள்வதற்கு எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை.” என்று சற்று கோபமாகவே கூறினார். அந்த கோபத்தில் இருந்த அவரது நியாயத்தை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதைப் பற்றி அன்றைக்கு நீண்ட நேரம் என்னுடைய கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டிருந்தேன்.
தமிழில் “சான்றோர்” என்று ஒரு சொல் இருக்கிறது. கிருஷ்ணகிரியில் ஒருமுறை கவிஞர் பெருமாள் ராசு ஐயா அவர்களுடன் உரையாடிக் கொண்டிருக்கும்போது “சான்றோன் என்பவன் பிறருக்குச் சான்றாக வாழ்பவன்” என்று பொருள் விளக்கம் தந்தார். என்னளவில் இலக்கியவாதி என்பவன் நிச்சயம் சான்றோன் அல்ல. அவன் வெறும் மனிதன். திறமை வாய்ந்த மனிதன். எழுத்துத் தொழில்நுட்பம் தெரிந்தவன். மனித மனங்களை வாசிக்கத் தெரிந்தவன். இவை இரண்டையும் இணைத்தை இலக்கியம் படைக்கத் தெரிந்தவன். மற்றபடி மனிதனிடமுள்ள அத்தனைச் சிறுமைத்தனங்களும் இலக்கியவாதியிடமும் குடிகொண்டிருப்பதில் வியப்பென்ன இருக்கிறது. மனித மனத்தின் நீள, அகல, ஆழங்களில் நீந்தி அலசி ஆராய்ந்து அழகாக எழுதி ஊரார்க்கு உரைத்துவிட்டு, பிறகு மீண்டும் அதே சகல சிறுமைத்தனங்களோடும் சாமான்ய மனிதனாகவும் வாழ இலக்கியவாதியால் மட்டுமே முடியும். அதனாலேயே அவன் எனக்கு விந்தனையானவனாகத் தெரிகிறான்.
மற்றேனைய துறைகளைப் போன்றே, இலக்கியவாதிகளிலும் சில சான்றோர்கள் உண்டு. “சொல்லே மந்திரமடா!” என்கிற முனைப்புடன் வாழ்பவர்கள் அவர்கள். சுய மேன்மையை நோக்கிச் செல்லும் இந்தத் தன்முனைப்பு எல்லோருக்கும் இருக்கவேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து. அப்படிப்பட்ட இலக்கியவாதிகள் இங்கு வெகுகுறைவு. இந்த விஷயத்தில் சிக்கல் சமூகத்திடம்தான் இருக்கிறது. ஒரு சான்றோனிடம், சிந்தனையாளனிடம் எதிர்பார்ப்பதையெல்லாம் எல்லாம் இலக்கியவாதிகளிடமும் எதிர்பார்க்கிறது இந்தச் சமூகம். சிலர் இந்தச் சிக்கலைத் தங்களுக்குச் சாதகமாக பயன்படுத்திக்கொள்கிறார்கள். 
இலக்கியத்தின் போர்வையில் தங்களைச் சான்றோர்களாகவும், சிந்தனையாளர்களாகவும் காட்டிக்கொண்டு சாமான்யர்களைத் தவறாக வழிநடத்தும் அத்தகையோரின் பாசாங்குத்தனத்தில் எனக்கு மிகப்பெரும் விமர்சனமிருக்கிறது. அதுவும் இன்றைய இளம் எழுத்தாளர்களின் பாசாங்குத்தனம் அவ்வளவு வெளிப்படையாகத் தெரியுமளவில் இருக்கிறது. தங்களை அதிமேதாவிகளாகக் காட்டிக்கொள்வதற்காக சதா சாமான்யர்களையும் அவர்தம் ரசனையையும் பகடி செய்துகொண்டும், விமர்சித்துக்கொண்டும் இருப்பது, ஆனால் அதே சமயம் சாமான்யர்கள் செய்யும் அத்தனையும் செய்வது. இதற்கு சாமான்யர்கள் எவ்வளவோ தேவலை. மேதைகளின் பாசாங்குத்தனத்தைவிட சாமான்யர்களின் நேர்மையே எனக்கு மிகவும் பிடிக்கிறது. எனக்கு எல்லாமும் வேண்டும். இந்த உலகம் பிரம்மாண்டமானது. எல்லாவற்றுக்கும் அதில் இடமிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..