சாமான்யர்களின் பக்தியும் கடவுளின் இரட்சகர்களும்

மனிதர்களுக்கு மதம் பிடித்துவிட்டது. அவரவர்க்கு அவரவர் மதம் பிடித்திருக்கிறது. எனக்கு மதம் பிடிக்கவில்லை. நான் கடவுளைவிட மனிதனை நேசிக்கிறேன். அவன் கடவுளை நேசிக்கிறானா இல்லையா என்பது எனக்கு முக்கியமில்லை. எந்தக் கடவுள் என்பதில் சுத்தமாக நாட்டமில்லை. "ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்" என்றான் பாரதி. அவரவர் நம்பிக்கை அவரவர்க்கு. அவரவர் அவநம்பிக்கையும் அவரவர்க்கே. அவரவர் தமதமது அறிவறி வகைவகை. மற்றோரின் நம்பிக்கையைச் சிதைப்பதை நான் விரும்புவதில்லை. அது மூட நம்பிக்கையாயிருப்பினும்கூட. உலகில் எத்தனையோ மூடத்தனங்கள். இதில் கடவுள் சார்ந்த விஷயங்கள் மட்டுமே மூடத்தனம் என்று கூறுவது பகுத்தறிவும் ஆகாது. உளவியல் அறிந்தவன் என்கிற முறையில் இதை என்னால் உறுதியாகச் சொல்லமுடியும். எனக்கு ஒன்று தேவையில்லை என்பதால் மற்றவர்களுக்கும் அது தேவைப்படக்கூடாது என்று எண்ணுவது அறிவீனம். இந்த உலகம் அற்புதமானது; பிரம்மாண்டமானது. இங்கு எல்லாவற்றுக்கும் இடமிருக்கிறது. 
என்னுடைய அம்மாவும், மாமாவும் வாட்சேப்பில் தினமும் கடவுளர் படங்களை அனுப்புகிறார்கள். அதற்கு நன்றிகூட சொல்வேன். நம்மை சில ஜீவன்கள் நினைவில் வைத்துக்கொண்டிருக்கிறது என்பதில் மகிழ்ச்சியடையும் சாமான்யன் நான். நாளைக்கே எனக்கு உடல்நிலை சரியில்லையென்றால் மசூதிக்குப் போவது பற்றி சற்றும் யோசிக்கமாட்டாள் என் தாய். சிறுவயதில் பலமுறை அதைச் செய்திருக்கிறார். அவளுடைய அப்பாவித்தனமான பக்தியில் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை. அன்பையும் அச்சத்தையும் அடிப்படையாகக் கொண்டது அது. இன்னொரு நண்பன் என்னுடைய எல்லா கட்டுரைகளையும் படித்துவிட்டு, இது அப்படியே குர்ஆனில் வருகிறது, நண்பா. நாங்கள் பின்பற்றுவதே இல்லை. நினைவூட்டலுக்கு நன்றி என்று கூறுகிறான். சாமான்ய பக்தர்களுக்கு நான் சொல்லிக் கொள்வதெல்லாம் ஒன்றுதான். கண்டதற்கெல்லாம் அஞ்சி நடுங்குபவர்களின் கடவுள் நம்பிக்கையின் மீது எனக்கு அவநம்பிக்கை உண்டாகிறது. கடவுள் நம்பிக்கை வேண்டாம் என்று கூறவில்லை. நம்புவதுதான் நம்புகிறீர்கள், முழுமையாக நம்புங்கள் என்றே கூறவிரும்புகிறேன். 
மத அடிப்படைவாதம் என்பது வேறொரு தளம். அடிப்படைவாதம் மனிதத்துக்கு எதிரானது. எனவே அது நிச்சயம் எதிர்க்கப்பட வேண்டியதே. எந்த மதமாயினும். தனிப்பட்ட முறையில் அதை நான் சார்ந்திருக்கும் மதத்தில் இருந்தே தொடங்குவேன். அறச் செயல்களை வீட்டிலிருந்தே தொடங்கவேண்டும் என்பார்கள். எனவே என் வீட்டிலிருக்கும் மத அடிப்படிவாதிகளை எதிர்ப்பதிலிருந்தே அதைத் தொடங்குவேன். ஒவ்வொரு மதத்தைச் சார்ந்தவர்களும் இதையே செய்யவேண்டும். ஏனெனில் அடிப்படைவாதத்தை எதிர்ப்பதுவும் ஒரு அறச்செயல்தான். கடவுளையே காப்பாற்றக் கிளம்பும் மத அடிப்படைவாதிகள் அவர்தம் கடவுளைக் காட்டிலும் வலிமையானவர்களா என்கிற கேள்வி எழலாம். உண்மையில் இவர்களுக்கு கடவுள் மீதெல்லாம் பெரிய ஈடுபாடு இருக்காது. உளவியல் ரீதியாகப் பார்த்தோமானால் அடிப்படைவாதிகள் பெரும்பாலும் நார்சிஸிஸவாதிகளாக இருப்பார்கள். மதம் மட்டுமல்ல, இவர்கள் எதைக் கையில் எடுத்தாலும் அதுதான் சிறந்தது என்றும், அதை மற்ற எல்லோருமே பின்பற்றவேண்டும் என்று நினைப்பவர்கள். அப்படி அது நடக்காத பட்சத்தில், அமைதியிழப்பார்கள்; அரக்கத்தனத்தை சூடிக்கொள்வார்கள். அவர்கள் கையிலெடுத்திருக்கும் விஷயத்துக்கு எதிர்கருத்து உடையோர்களை மூர்க்கமாகத் தாக்கி, அவர்களை அழிக்க முயல்வார்கள். அதற்காக எதையும் செய்ய முயல்வார்கள். எதிர்கருத்துடையோரைப் பற்றி எதைச் சொன்னாலும் அதை அப்படியே நம்புமளவிற்கு நிராயுதபாணிகளாக நிற்பார்கள். இத்தகையோர் கைகளில் மதமும், அரசியலும் வந்தமர்ந்துவிட்டால் அவர்களுடைய மூர்க்கத்தனம் அதன் உச்சத்தைத் தொடும். அதன் பிறகு யாராலும் அதைக் கட்டுப்படுத்தமுடியாது. உளவியல் தெரிந்த எவரும் என்னுடைய இந்தக் கருத்தை ஏற்க மறுக்கமாட்டார்கள். 
ஒரு சாமான்யனாக, மற்றோரை நேசிப்பதே மனிதம் என்பேன். இயற்கை நம்மை அரவணைத்துச் செல்வது போல், சகல ஜீவ ராசிகளையும் நாம் அரவணைத்துச் செல்வது முக்கியம். எல்லோரும் அவரவர் விரும்புவதை செய்தல் நலம். அவரவர் வாழ்க்கை வாழ்தல் சுகம். இங்கு நான் செய்துகொண்டிருப்பதெல்லாம் நல்லெண்ணத்தோடு என் அனுபவங்களைப் பகிர்தலே. வேண்டுவோர் எடுத்துக்கொள்ளலாம், முடிந்தோர் செயல்படுத்திப் பார்க்கலாம். வேண்டாதோர் விட்டுவிடலாம். விமர்சிக்கலாம். என்னளவில் திணிப்பு தீண்டத்தகாதது. தன்னுடைய நம்பிக்கையே ஆகச் சிறந்ததென்றும், சக மனிதனை அவனுடைய நம்பிக்கைகளுக்காகத் தூற்றுவதும் வெறுப்பதும் மனிதம் ஆகாது. ஆனால் அடிப்படைவாதம் என்பது தான் சார்ந்த மார்க்கத்துக்காக இவை அனைத்தையும் செய்யும். எதையும் தூக்கி எறியத் தயங்காது. எவரையும் கொல்லும். அது சரியென்றும் வாதம் செய்யும். தனக்கான நியாயங்களை உருவாக்கிக் கொள்ளும். அதைத்தான் அன்றாடம் கண்ணுற்று வருகிறோம். 
இறுதியாக, எதற்கெடுத்தாலும் அச்சம் கொள்ளும் பக்தர்களும், எல்லாம் வல்ல கடவுளையே இரட்சிக்கக் கிளம்பியிருக்கும் மதவாதிகளும்தான் உண்மையில் தங்கள் கடவுளைக் காலில் போட்டு மிதிக்கிறார்கள். மற்றவர்கள் அல்ல. இவர்களே உண்மையான நாத்திகர்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..