அறப்போர்

இந்தப் பதிவு "அறப்போர் இயக்கம்" பற்றியதல்ல. ஆனாலும் அவர்களைப் பற்றி குறிப்பிடவேண்டிய அவசியம் இருக்கிறது. அறப்போர் இயக்கம் மிகவும் சிறப்பாக அரசியல்வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் அம்பலப்படுத்தி வருகிறது. உண்மையில் பாராட்டப்படவேண்டிய முயற்சி அது. என்னுடைய கல்லூரி நண்பன் மோகன் இயக்கத்தில் தீவிரமாக இயங்கி வருகிறார். தேசத்தின் மீது மிகுந்த அக்கறையும் காதலும் கொண்ட நண்பன். "நீங்கள் பெல்ஜியத்திலிருந்து எப்போது இந்தியாவுக்கு வரப் போகிறீர்கள்?" என்று நல்லெண்ணத்தோடு விமர்சிக்கும் நண்பன். 
ஆனால், அரசியல்வாதிகளையும், அதிகாரிகளையும் மட்டும் எதிர்த்து என்ன பயன்? நரிக்கூட்டத்தின் தலைவன் இன்னொரு நரியாகத்தானே இருக்க முடியும். சிங்கத்தை எப்படி எதிர்பார்க்க முடியும். எல்லோரும் அவரவர் அளவில் சிறப்பாக, வெகுஜன சினிமா மொழியில் சொல்வதானால், தரமாக ஊழல் செய்கிறார்கள். கொஞ்சம் செய்தவன் அதைவிட அதிகமாகச் செய்தவனைக் கேள்வி கேட்கிறான். உண்மையில் முதலில் அறப்போர் புரிய வேண்டியது மக்களை எதிர்த்தே என்பதே என்னுடைய கருத்து. மக்கள் என்பதில் அனைவரும் அடக்கம். இது பற்றி மோகனுடன் பேசிக்கொண்டிருக்கும் போது, "நிச்சயம் இதை அறப்போர் இயக்கத்தின் கவனத்துக்கு எடுத்துச் செல்வேன்" என்றார். அறப்போர் போன்ற எந்த எதிர்பார்ப்பும் இன்றி சமூகத்தில் மாற்றம் நிகழவேண்டும் என்று உழைக்கும் சுதந்திரமான அமைப்புகளாலே அது சாத்தியம். அரசியல், இனம், மதம் சார்ந்த அமைப்புகளோ ஊடகங்களோ இதைச் செய்யும் என்கிற நம்பிக்கை எனக்குத் துளியும் இல்லை. வெகுஜனத்தை எதிர்க்கும் துணிவு இவர்களுக்கு இருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் கூட்டத்தை நம்பித்தானே இவர்களின் வியாபாரமே. 
பொள்ளாச்சி விவகாரத்தை எடுத்துக்கொள்வோம். இந்நேரம் நீங்கள் அதை மறந்திருப்பீர்கள். ஊடகங்களில் காட்டும் செய்திகளில் மனக்கிளர்ச்சி கொள்பவர்களை, அதே ஊடகம் வெகு எளிதாக திசை திருப்பி மறக்கடிக்கச் செய்துவிடும். சமூக பிரச்சினைகளைப் பற்றி ஆழமாக சிந்தித்துத் தெளிவான பார்வை கொண்டவர்கள் கிளர்ச்சி கொள்வதில்லை, ஆனால் தொடர்ச்சியாக அது சார்ந்து சமூகத்துடன் விவாதம் செய்து போராடிக்கொண்டிருப்பவர்கள் அவர்கள். கண நேர கிளர்ச்சியல்ல அது. இதயத்தின் ஆழத்தில் சதா கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும் எரிமலைக் குழம்பு. அஃதொரு வித அமைதியின்மை. ஆனால் ஊரே பற்றி எரிந்துகொண்டிருக்கும்போது எரிமலை சாவதானமாகத்தான் நின்றுகொண்டு ஊரின் சாபத்தை வாங்கிக்கொண்டிருக்கும். ஊர் அமைதியடைந்த பிறகே அது தன் வேலையைத் துவங்கும். 
பொள்ளாச்சிக்கு வருவோம். குற்றவாளிகளுக்குச் சட்ட ரீதியாக தண்டனை ஒருபுறம் இருந்தாலும், முதலில் இந்த விஷயத்தில் அடிப்படையாக ஒன்றை புரிந்துகொள்ளவேண்டியது அவசியம். வீடியோக்களை வைத்துப் பெண்களை மிரட்டுவதற்கு அந்தக் கயவர்களுக்கு துணிச்சலை தந்தது எது? அப்படிப்பட்ட மிரட்டலுக்கு பயந்து அந்தப் பெண்களை அடிபணிய வைத்தது எது? சற்று நிதானமாக சிந்தித்துப் பாருங்கள். உண்மையில் நாம் எல்லோரும் மாற்றவேண்டியது அதைத்தான். அது வேறு எதுவும் அல்ல. இந்தச் சமூகமேதான். வீடியோ வெளியே வந்தால் நம்மை இந்தச் சமூகம் எப்படி நடத்தும் என்பதற்கு அஞ்சித்தானே அந்தப் பெண்கள் அடிபணிந்தார்கள்; மெளனமாக தங்களையே அழித்துக்கொண்டார்கள். ஆனால் நடந்தது என்ன? அவர்கள் எதற்கு அஞ்சினார்களோ அதையேதான் செய்தது இந்த மூடச் சமூகம்! சமூக வலைதளமெங்கும் ஆளாளுக்கு அந்த வீடியோவை/ஆடியோவைப் பகிர்ந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரே ஒரு கேள்வி. அந்த மறைக்கப்பட்ட வீடியோவில் இருந்த குரல் உங்கள் குடும்பத்திலுள்ள பெண்ணுடையதாயிருந்தால் பகிர்ந்திருப்பீர்களா? சில நண்பர்கள், "அரசாங்கம் சட்ட நடிவடிக்கை எடுக்கவில்லை. அழுத்தம் கொடுப்பதற்காகவே இதையெல்லாம் செய்கிறோம்" என்று விவாதிக்கிறார்கள். உங்கள் நல்லெண்ணத்தை மதிக்கிறேன். ஆனால் ஒரு பெண்ணுக்கு கொடுமை நேர்ந்திருக்கிறது என்று வார்த்தைகளால் சொன்னால் புரிந்துகொள்ள முடியாத அளவுக்கு மரத்துப் போய், உணர்ச்சிகளற்ற ஜடங்களாகிவிட்டோமா நாம்? அப்படியென்றால் ஏன் அப்படி இருக்கிறோம் என்று ஆராய்வதற்குத்தான் நம்முடைய முன்னுரிமை அளிக்கவேண்டும். அதை விட்டுவிட்டு, ஆடியோவையும் வீடியோவையும் போட்டுக்காட்டி காட்டி வெறியேற்றும் வித்தை தீவிரவாதிகளுக்கானது. சிந்திக்கும் மனிதர்களுக்கானதல்ல. 
தீமை பெருகி வருகிறது என்கிறார்கள். தீமை என்றைக்கு இல்லாமல் இருந்தது! தீமைக்கான இயங்குதளங்கள் பெருகிவிட்டது. அவ்வளவே. அதே சமயம், தீமையைச் சந்திக்க மக்களுக்குத் துணிவு அறவே இல்லாமல் போய்விட்டது. வெற்றுச் சமூக விதிகள் எல்லாம் தீமைக்கே துணை போவதாக உள்ளது. என்னளவில், எல்லா விதிகளுமே ஆராய்ந்து மறுவரையறை செய்யப்படவேண்டியவை. இவையனைத்துக்கும் மேலாக நம் குழந்தைகளை பயமூட்டி வளர்ப்பதற்குப் பதிலாக, துணிவைக் கற்றுக்கொடுக்கவேண்டிய தருணம் இது. தன்னுடைய நிர்வாணப் படம் எவனோ ஒரு கயவனால் பகிரப்பட்டதால் ஒரு குழந்தை தற்கொலை செய்துகொள்கிறாள். இந்த விஷயத்தில் அந்தக் கயவனைக் காட்டிலும் ஆபத்தானது இந்தச் சமூகமே. ஏனெனில் இந்தப் பிற்போக்குச் சமூகத்தைக் காட்டித்தானே அவன் அவளை மிரட்டுகிறான். நம்மையே காட்டி நம் குழந்தைகளை மிரட்டிச் சிதைக்கிறார்கள் என்கிற உண்மை உங்களுக்கு இன்னமும் விளங்கவில்லையா, நண்பர்களே? இது உங்களுக்குள் ஒரு அமைதியின்மையை ஏற்படுத்தவில்லையா, உறவுகளே? இன்னும் எத்தனைக் காலத்துக்கு துருபிடித்துப்போன கலாச்சாரத்தைக் கட்டிக்கொண்டு அழப் போகிறீர்கள், என் அன்புக்குரியவர்களே? நம் வருங்காலச் சந்ததியினர் மனநோயாளிகளான பிறகா? 
இன்றைக்கு நம் ஒவ்வொருவரைச் சுற்றிலும் ஒரு நூறு கேமெரா லென்சுகள் படம்பிடிக்க காத்துக்கிடக்கின்றன. எத்தனை பேருடன் நம்மால் போராட முடியும்? போராடவேண்டியது நம்முடனேதான். இஃதொரு ஒரு யுத்தம். தீமையின் யுத்த தந்திரங்கள் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறிவிட்ட நிலையில், தீமையுடன் சேர்ந்து நாமும் நம்முடைய போராட்ட யுத்தியை மாற்றிக்கொண்டே இருக்கவேண்டும். அந்த விதத்தில் ஆயிரம் ஆயுதங்களைவிடவும், தொழில்நுட்பங்களைவிடவும் வலிமையானதொரு ஆயுதம் நம்மிடம் இருக்கிறது. அது நம் மனம். ஆனால் அது ஒழுங்காகச் செயல்பட துணிவு என்னும் எரிபொருள் தேவை. நாளையே என்னை ஒருவன் அழைத்து உன்னுடைய நிர்வாண புகைப்படத்தை இணையத்தில் போடப் போகிறேன் என்று மிரட்டுவான் எனில், "தாராளமாக செய்துகொள்." என்று என்னுடைய இணையத்தளத்தைக் கொடுத்துவிட்டுத் உறங்கச் சென்றுவிடுவேன். அல்லது “அனுப்பு நானே பகிர்கிறேன்” என்று கூறியிருப்பேன். I MEAN IT. இந்த உலகமே என் குடும்பம். எல்லோருமே இங்கு என் உறவுகள். நான் பிறந்தபோது என் உறவுகள் என்னை நிர்வாணமாகத்தானே பார்த்தார்கள். நான் இறந்தாலும் அப்படியே. இதில் எவருக்காக எதற்காக நான் வெட்கம் கொள்ளவேண்டும். இதுபோன்ற துர்சிந்தனையைக் கொண்டதற்காக மிரட்டுபவன்தானே வெட்கப்படவேண்டும். மேலும் பிறரிடம் இல்லாத எது என்னிடம் இருக்கிறது. "பூனைக்கு இல்லாத வெட்கம் நமக்கு மட்டும் ஏனப்பா? நம் கற்கால முன்னோர்களிடம் நாம் கற்றுக்கொள்ளவேண்டும்." என்று என் ஒன்பது வயது மகன் என்னிடம் கேட்கிறான். “பேலியோ டயட்” என்று கற்கால உணவை மட்டும் தின்றால் போதாது நண்பர்களே, அந்தத் துணிவு மனநிலை வேண்டும். 
நான்கு வருடங்களுக்கு முன்பு மணல்வீடு ஹரியைச் சந்தித்தபோது அவரிடம் "எந்திரன்" திரைப்படத்தில் ஒரு காட்சியைப் பற்றி பேசினேன். தீப்பற்றி எரியும் குடியிருப்புக்குள் புகுந்து ரோபோ எல்லோரையும் காப்பாற்ற முயலும். இறுதியாகக் குளியலறையில் நிர்வாணமாக இருக்கும் ஒரு இளம்பெண்ணைக் காப்பாற்றித் தூக்கிக்கொண்டு வந்துவிடும். ஆனால் ஊடகங்கள் அந்தப் பெண்ணை படம்பிடிக்க ஆரம்பித்ததும் அவள் உடனே ஒரு வாகனத்தின் குறுக்கே சென்று தற்கொலை செய்துகொள்வாள். உடனே நாயகனுக்கு வில்லனிடமிருந்து அழைப்பு வரும். அவர் நாயகனிடம்; "நான் அப்பவே சொன்னேன் அல்லவா? Its just a machine!" என்று சிரித்துக்கொண்டே சொல்வார். அதைக்கேட்டவுடன் நாயகர் சோகத்துடன் தலைகுனிவார். இப்படித்தான் நம் சமூகம் தலைகுனிந்துகொண்டிருக்கிறது. எத்தனை பிற்போக்கான காட்சி? இதில் ஒரே ஒரு நல்ல விஷயம் படத்தின் உண்மையான நாயகனான அந்த ரோபோவுக்கு ஒரு உயிரின் அவசியம் தெரிந்திருக்கிறது. அதை “Its just a machine” என்கிறார்கள். Looks like the machines are more human than human-beings. 
என்னுடைய மகனுக்கு ஒன்பது வயதாகிறது. வீட்டில் எல்லோரும் ஒன்றாக அமர்ந்து திரைப்படங்கள் பார்ப்பது வழக்கம். ஆனால் அந்தப் படங்களை நானோ என் மனைவியோ முன்பே பார்த்துவிடுவோம். குறிப்பாக தமிழ் படங்களுக்கு தரப்படும் "U" தரச் சான்றிதழ்களை நம்பமுடிவதில்லை. வன்மங்களும் வக்கிரங்களும் நிறைந்திருக்கும் படங்கள்கூட எப்படி 'U' பெற்று வெளியே வருகிறது என்று தெரியவில்லை. இந்த விஷயத்தில் வெளிநாட்டுத் திரைப்படங்கள் எவ்வளவோ தேவலை. ஏனெனில் சான்றிதழ்களை நம்பலாம். இதை இப்போது எதற்கு ஆதங்கப்பட்டுச் சொல்கிறேன் என்றால், என் குழந்தை வன்மங்களும் வக்கிரங்களும் நிறைந்த வயதுக்கு மீறிய தவறான காட்சிகளை எட்டு வயதில் பார்த்துவிடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். ஆனால் "அதே வயது" குழந்தைக்கு காஷ்மீரத்தில் இரண்டு வருடங்களுக்கு முன்பு நேர்ந்த கதியைப் பாருங்கள். ஒரு குழந்தையை இப்படிச் சிதைத்து எறிவதற்கு இவர்களுக்கு எப்படி மனம் வருகிறது? நினைத்துப் பார்த்தாலே உடல் நடுங்குகிறது. ஒரு எட்டு வயது குழந்தையைக்கூட காப்பாற்ற முடியாத இந்த தேசத்தில் இராணுவத்துக்கு கோடிகளாகக் கொட்டி என்ன பயன்? குழந்தைகளைக்கூட காப்பாற்றாத சட்டங்கள் இருந்தென்ன பயன்? நீதித்துறைகள் என்ன செய்துகொண்டிருக்கின்றன? 
சட்டங்களைப் பற்றி கூறினேன். ஆனால் நான் குறிப்பாக இங்கு சொல்ல வந்தது சமூக வலைத்தளத் தெருக்களில் கொட்டிக்கிடக்கும் தரங்கெட்ட பதிவுகளைப் பற்றி. பாலியல் வன்கொடுமைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் அடையாளங்களை வெளியிடக்கூடாது என்று ஐ.பி.சி தெளிவாகக் கூறுகிறது. அப்படிப் பகிர்பவர்களுக்கு சிறைத்தண்டனை என்றும் சட்டம் சொல்கிறது. ஆனால் அன்றைக்கு நாடே ஒரு குழந்தையின் புகைப்படத்தை வெட்கமின்றி பகிர்ந்து வந்தது. மைனர் குழந்தை. அவளுடைய பெற்றோருக்குக்கூட இதற்கு உரிமையில்லை. ஒருவேளை அந்தக் குழந்தை உயிர் பிழைத்திருந்தால், தன்னுடைய இருபதாவது வயதில், ஒரு காலத்தில் ஒரு நாடே தன்னுடைய புகைப்படத்தைப் பகிர்ந்து, தான் வன்கொடுமைக்கு ஆளானதையும், அதைச் செய்தவர்கள் இந்துக்களா, இசுலாமியர்களா என்று விவாதித்துக்கொண்டிருந்தது என்பதை விரும்புவாளா? மெத்தப் படித்த மேதாவிகளின் பதிவுகளைப் பார்த்தபோது, அவர்களுக்கு குழந்தையைவிட அவர்தம் மதத்தைக் காப்பாற்றுவதே ஆகப்பெரும் கடமையாகக் கொண்டிருப்பது வெளிப்படையானத் தெரிந்தது. மத வியாபாரிகள்! அவள் ஒருவேளை சட்ட நடவடிக்கை எடுக்க விரும்பினால் எத்தனை கோடிப் பேர் சிறை செல்லவேண்டியிருக்கும் என்று எண்ணிப் பாருங்கள். 
சட்டங்களை விடுங்கள். ஊடக அறம் என்று ஒன்று இருக்கிறதா இல்லையா? எட்டு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடுமை என்று செய்தி எழுதினால் யாருக்கும் புரியாதா? உங்கள் சென்ஸேஷனக்கும், டி.ஆர்.பி ரேட்டங்கிற்கும் ஒரு குழந்தையை கூவிக் கூவி விற்றுக்கொண்டு இருந்தீர்களே! இது அந்தக் குற்றவாளிகள் செய்ததைவிட மோசமான செயல். அல்லது நான் ஏற்கனவே சொன்னதுபோல், இந்தவிதமான தீவிரவாத யுக்தியைக் கடைபிடிக்குமளவுக்கு நமக்கு மரத்துப் போய்விட்டதா? சமூக ஊடகம், குறிப்பாக முகநூலைப் பற்றியும் ஏற்கனவே சொல்லிவிட்டேன். அது ஒரு மலக்கிடங்கு. பொது ஊடகத்தின் அருவருப்பான நீட்சியாகவே அதை நான் காண்கிறேன். இன்னும் சொல்லப்போனால் பத்தில் எட்டு தகவல்கள் எனக்கு ரயில்வண்டியிலுள்ள டாய்லெட் கிறுக்கல்களை நினைவுபடுத்துகிறது. அறத்தின் வீழ்ச்சி வேறென்ன சொல்ல. 
குழந்தைகளுக்கு, குறிப்பாகப் பெண் குழந்தைகளுக்கு நான் சொல்வது ஒன்றுதான். "BE BOLD" - what may come what may go. நம் கோழைத்தனம் பிறருக்கு ஆயுதமாகிவிடக் கூடாது. பழங்குடி மனநிலையை வளர்த்துக்கொள்ளுங்கள். எவருடைய மிரட்டலுக்கும் அடிபணியாதீர்கள். நாம் அறப்போர் புரியவேண்டியது நம்மையும், நம்மைச் சுற்றி இருக்கும் பாசாங்குத்தனமான இந்தச் சமூகத்தையும் எதிர்த்தே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..