வாசிப்புக்கு நேரமில்லை

"வாசிப்பு" தொடர்பாக வினா எழுப்பிய நண்பர் ஒருவருக்கு வாட்சேப் குழு ஒன்றில் எழுதிய பதில்:
எழுத்தில் நான் கடைஞன். ஒரு மாணவன். அவ்வளவே. ஆனால், ஒரு வாசகன் என்பதை பெருமையுடன் உரக்கச் சொல்லமுடியும். என்னுடைய எழுத்து மட்டுமல்ல. நண்பர்களும் அவர்தம் பிள்ளைகளும் பலதரப்பட்ட நூல்களையும் வாசிக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இது ஒரு "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்" மனநிலை. அதன் காரணமாகவே அறிஞர்களைப் பற்றியும் அவர்தம் நூல்களைப் பற்றியும் நான் அதிகமாக குறிப்பிடுவது. உண்மையில் என்னுடைய சிற்றறிவைக் கடந்து மேதைகளை நீங்கள் சென்றடைய வேண்டும் என்பதே என் அவா. நூல்களை வெறுமனே அறிமுகப்படுத்தாமல், அதில் என்னுடைய அனுபவத்தையும் சேர்க்கும்போது அதில் நம்பகத்தன்மை கூடுகிறது. 
என்னுடைய பார்வையும் நீ கூறிய அதே "நேரத்தின்" மீதே விழுகிறது. நேரமும், கவனமும் வாசிப்புக்கு மட்டுமல்ல, நாம் செய்யும் எந்தக் கலைக்கும், தொழிலுக்கும் அவசியமானது. நேரமும் கடவுளும் ஒன்றுதான். இருக்கிறது என்றால் இருக்கிறது. இல்லை என்றால் இல்லை. எனவே இது நேரம் சார்ந்த பிரச்சினை இல்லை. நேரமின்மை என்பது ஒரு அறிகுறி மட்டுமே. மற்றபடி இது முன்னுரிமை சார்ந்தப் பிரச்சினை. அதுவே மூலகாரணம். "வாசிப்பது எனக்கு முன்னுரிமை இல்லை" என்று கூறினால், அதை நான் மறுப்பின்றி ஏற்றுக்கொள்வேன். முன்னுரிமையாக இல்லாத பட்சத்தில், ஒரு கூடை நேரம் பத்து பைசாவுக்கு விற்றால்கூட யாரும் அதை வாங்கி வாசிப்புக்குப் பயன்படுத்தப் போவதில்லை. "முன்னுரிமை இருக்கிறது ஆனால் நேரம்....." என்று இழுத்தால், அதை ஒரு நொண்டிச் சாக்காக மட்டுமே பார்க்க முடியும். வாரன் பஃபே ஒரு நாளைக்கு ஐந்து மணிநேரம் வாசிக்கிறார். நாம் அவரைவிட மும்முரமாக வேலை பார்ப்பவர்களா? நிச்சயம் நான் இல்லை. 
என்னுடைய முன்னுரிமைகளில் "பட்டைத் தீட்டிக்கொள்வது" என்பது முதலிடத்தில் இருக்கிறது. புத்தகம் வாசிக்க நேரம் இல்லாதபோது எதைச் செய்வதைத் தவிர்க்கவேண்டும் என்பதற்கு என்னிடம் பெரிய பட்டியலே இருக்கிறது. அத்தனை தேவையற்ற வேலைகளைத்தான் அன்றாடம் செய்துகொண்டிருக்கிறோம். எனவே அந்தப் பிரச்சினை எனக்கு வந்ததில்லை. நீங்களும், வேண்டுமானால் ஒரு வாரத்தில் நீங்கள் செய்யும் அத்தனை வேலைகளையும், அதற்கு நீங்கள் செலவழிக்கும் நேரத்தையும் பட்டியலிடுங்கள். அவற்றுக்கு 1, 2, 3 என்று உங்கள் முன்னுரிமைகளை வழங்குங்கள். முன்னுரிமைப் பட்டியலின் இறுதியில் இருப்பவற்றை இரக்கமின்றி அழித்துவிடுங்கள். இப்போது புத்தகம் வாசிப்பதற்கான நேரத்தை கண்டுபிடிப்பது எளிதாக இருக்கும். 
ரம்பத்தை சாணைப் பிடிக்க நேரமின்றி ஒருவன் நீண்ட நேரமாக மரங்களை மிகுந்த பிரயத்தனப்பட்டு அறுத்துக்கொண்டிருந்தானாம். அவனுடைய உழைப்பை நான் மதிக்கிறேன்; தலைவணங்குகிறேன். ஆனால் அதிலிருக்கும் அறியாமையை விமர்சிப்பேன். சாணைப்பிடிக்கப்பட்ட ரம்பம் அதே வேலையை விரைவாக செயல்படுத்த உதவும். கடின உழைப்புக்கும் அவசியமிருக்காது. என்னுடன் பணிபுரிபவர்களையும், இளைஞர்களையும் அடிக்கடி பயிற்சிகளுக்கு போகச் சொல்கிறேன். சமீபத்தில்கூட ஒருவருக்கு ஐந்து புத்தகங்களை அன்பளிப்பாகத் தந்தேன். பயிற்சிகளுக்கு நேரமில்லை என்று கூறிவிட்டு வேலையை மட்டுமே செய்துகொண்டிருப்பார்களேயானால், அவர்களுடைய செயல்திறன், அதன் விளைவு இரண்டுமே பரிசோதனைக்குட்படுத்தப்பட வேண்டியதே என்பேன். குறைந்தபட்சம் சார்ந்திருக்கும் தொழில் தொடர்புடைய நூல்களையாவது வாசிக்கவேண்டும். ஆனால் பல விஷயங்கள் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து கிடக்கிறது. நான் உளவியல் சார்ந்து பல புத்தகங்களை வாசிக்க நேர்ந்ததும் அப்படி ஒரு மகிழ்ச்சியான விபத்துதான். காந்தியைப் பற்றி அறிந்துகொண்ட ஒரு செய்திகூட என்னுடைய தொழிலுக்கு உதவியிருக்கிறது. இறுதியாக நான் சொல்வது இதுதான் நண்பர்களே. சாணைப் பிடிக்காத ரம்பம் போன்றதாகிவிடக்கூடாது நம்முடைய அறிவு.
தன்னம்பிக்கை, அறிவு, உழைப்பு - இவைதான் நம் சொத்து. என்னளவில் இந்த வரிசை மிகவும் முக்கியம். தன்னம்பிக்கை இல்லாதவனின் அறிவும், அறிவு இல்லாதவனின் உழைப்பும், உழைக்க மனமில்லாதவனிடம் இருக்கும் மற்ற இரண்டும், எதையும் அவ்வளவு எளிதில் பெற்றுத் தராது. அப்படியே பெற்றாலும் அது நிலைத்து நிற்க மற்ற இரண்டும் நிச்சயம் தேவை என்று அறிக. சரியான நூல்கள் வாசிப்பதன் மூலம் இவற்றில் முதலிரண்டும் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. சரியான மனிதர்களை சந்திப்பதன் மூலமாகவும் பெற்றுக்கொள்ள முடியும். அது ஒரு குறுக்கு வழி. சரியான மனிதர்கள் என்றேன். ஏனெனில் இது போலிகளும், போலச் செய்பவர்களும் நிறைந்தொரு உலகம். சரியான நூல்கள் என்றும் கூறியது அதே காரணத்தால்தான். மேலே குறிப்பிட்ட மூன்றுமே வேண்டாம் என்று ஒதுக்குபர்களிடம் பொறாமை என்னும் துர்குணம் வேறு வழியே இல்லாமல் தேடி வந்து தொற்றிக்கொள்ளும். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..