கண்ணனுக்கு உபதேசம்

சிறுவயதில் கண்ணனாக ;-)

டின்னிட்டஸ் அரக்கன் அவ்வப்போது தன் வேலையைக் காட்டுவான். நேற்று நள்ளிரவு வரை உறக்கமில்லை. இரண்டு வாரங்களாகவே இந்த நிலைதான். எப்படியோ உறங்கிவிட்டேன். கனவில் கண்ணன் வந்தான். கனவிலும் உறங்கிக்கொண்டிருந்தேன். திடீரென்று "பூம்ம்ம்ம்ம்" என்று டின்னிட்டஸ் சத்தம். கண் விழித்துப் பார்த்தால் கண்ணன் என் காலருகே அமர்ந்திருந்தான். 
"கண்ணா, இது என்ன விளையாட்டு? கடவுள் என் காலருகே அமர்வதா?"
"ஏன் இப்படிப் பதறுவதுபோல் நடிக்கிறாய்? உனக்குத்தான் இந்தக் கால், கை பாசாங்கெல்லாம் பிடிக்காதே. கதவு இந்தப் புறம் இருக்கிறது. நீ பாட்டுக்கு எழுந்து என்னைப் பார்க்காமல் சென்றுவிட்டால்? அதான் இங்கு அமர்ந்துகொண்டிருக்கிறேன்"
"நீ துரியோதனுனுக்கு செய்த அநியாயம் உனக்கே திரும்பிவிடுமோ என்று அஞ்சுகிறாய். அது சரி. கர்ம வினையைப் பற்றி உனக்கு நான் சொல்லித்தர வேண்டுமா என்ன? ஆனால், கண்ணா! நான் ஒரு சாமான்யன். நீயோ கடவுள். என்னிடமிருந்து நீ பெறுவதற்கு என்ன இருக்கிறது"
"அட போப்பா. கடவுள் மனிதனைக் காப்பாற்றியது அந்தக் காலம். இது மனிதர்கள் சக மனிதர்களைக் கொன்று என்னைப் போன்ற கடவுளர்களைக் காப்பாற்றிக்கொண்டிருக்கும் காலம்"
"நீ சொல்வதிலும் நியாயம் இருக்கவே செய்கிறது. உனக்கு என்ன வேண்டுமோ கேள், கடவுளே! தருகிறேன்"
"அது ஒன்றும் இல்லையப்பா. இந்த நாட்டில் இப்போது எனக்கு மரியாதையே இல்லை. எல்லோரும் ராமனைத் தேடி ஓடுகிறார்கள். அங்கே பெல்ஜியத்தில் ராதாதேசம் என்று ஒரு ஊரையே உருவாக்கி எனக்குக் கோயில் கட்டியிருக்கிறார்களாமே. என்னைத் தேடி நிறைய பக்தர்கள் அங்கே வருகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். அதான் பெல்ஜியத்துக்கு குடியேறலாமென்று முடிவு செய்திருக்கிறேன். விசா தொடர்பாக எனக்குக் கொஞ்சம் உதவி செய்கிறாயா?"
"சுத்தம். நீ இன்னமும் அங்கு வரவே இல்லையா? உன்னைப் பார்ப்பதற்கென்று நானே நான்கு முறை அங்கு சென்றிருக்கிறேனே. இப்படி ஏமாற்றிவிட்டாயே கண்ணா?"
"இல்லப்பா. இங்கேயே வேலை சரியாக இருந்தது. நம்மை எங்க சும்மா விட்டானுங்க. ஹாலிடே கொடுக்காம வேலை வாங்கினானுங்க. இப்போ இன்னொருத்தன் பின்னாடி போறானுங்க படுபாவிங்க..”
"உன் நிலைமை புரியுது. ஆனால் நீ இங்கு வருவதில் இப்போது ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது, கண்ணா. நீ ஒர்க் பெர்மிட் இல்லாம இங்க வேலை பார்க்கமுடியாது. இதுல வேற, நேத்துதான் இங்கு ஒரு தீவிர வலதுசாரிக் கட்சி தேர்தலில் வென்றிருக்கிறது. ஒர்க் பெர்மிட், விசா இதெல்லாம் இனிமேல் கிடைப்பது ரொம்ப கஷ்டம். ஒரு மூன்று மாதத்துக்கு முன்னால் என்னிடம் சொல்லியிருக்கலாம். இப்போது என் நிலைமையே இங்கு படுமோசம். உனக்கு எங்க இருந்து உதவுறது?"
"அடப்பாவிகளா. இப்படித் தோல்வி மேல் தோல்வி வந்தால் நான் என்ன செய்வேன்?"
"தோல்வியை எண்ணி கலங்கிடும், கண்ணா. நவீன உலகத்தில் தோல்வியின் தன்மை பற்றி சொல்கிறேன், கேள்."
"சொல்லப்பா. இனி நீயே என் கண்ணன். நான் உன் பார்த்தன்."
"உனக்கு அப்துல் ரகுமானைத் தெரியுமா?'"
"அப்துல் ரகுமானுக்கும் ஆனந்த கிருஷ்ணனுக்கும் என்னப்பா சம்பந்தம்?"
"இருக்கிறது. அவர் மகாபாரதம் பற்றி ஒன்று சொல்லியிருக்கிறார். இது நவீன குருஷேத்திரம். இங்கு வெற்றி எண்ணிக்கையை வைத்து மட்டுமே தீர்மானிக்கப்படுகிறது"
"அதனால்?" 
"கௌரவர்களே ஜெயிக்கிறார்கள்” 
"நீ யாரைச் சொல்கிறாய்" 
"ஜெயிப்பவர்கள் எல்லோரையும் சொல்கிறேன்" 
"but why?"
"why because the end justifies the means."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..