எளிமையின் கம்பீரம்


என்னுடைய ஆற்றலுக்கான ஊற்றுக்கண்களில் ஒருவரான "ஜோ டி குருஸ்" அண்ணனுக்குப் பிறந்த நாள். 
நான்கு வருடங்களுக்கு முன்பு சென்னைப் புத்தக விழாவில்தான் அவரை முதன்முறையாகச் சந்தித்தேன். வாசு அறிமுகம் செய்துவைத்து என்னுடைய சிறுகதைத் தொகுப்பை அவருக்கு வழங்கினார். "கண்டிப்பாக வாசித்துவிட்டுச் சொல்கிறேன், தம்பி" என்று கூறினார். இதே போன்று அங்கு வந்த பல எழுத்தாளர்களுக்கும் புத்தகத்தைக் கொடுத்தோம். எல்லோரும் அதையே சொன்னார்கள். ஆனால் இரண்டு வாரங்களில் அண்ணனிடமிருந்து ஒரு கடிதம். "தம்பி, உங்கள் 'அம்மாவின் தேன்குழல்' சிறுகதையைப் பற்றி பேச வேண்டும். அழைக்கவும்." என்று கைப்பேசி எண்ணைத் தந்திருந்தார். அதே தினம் நண்பன் கார்த்திக் புகழேந்தியிடமிருந்து ஒரு அழைப்பு. "நண்பா, ஜோ டி குருஸ் அண்ணன் உங்கள் படைப்பைப் பற்றி சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தார். உங்களுடன் பேச விரும்புகிறார். பேசுங்கள்" என்று கூறினார். அப்போது நான் சென்னையில் இருந்தேன். நேரிலேயே சந்திக்கலாம் என்று அவரது அலுவலகத்துக்கே போய்விட்டேன். அவருக்கே உரித்தான புன்னகையுடன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து வரவேற்று என்னுடைய கைகளை இறுகப் பற்றி குலுக்கியபோது, ஏதோ பல நாட்கள் பழகிய உணர்வு. 
பொன்னியின் செல்வன் திரைப்படத்துக்கு யார் யாரையோ தேடிக்கொண்டிருக்கிறார்கள். இதுவன்றோ அசல் தமிழ் முகம் என்று மனைவியிடம் இரண்டு வாரங்களுக்கு முன்புகூட கூறினேன். அவருடைய கம்பீரமான உருவத்துக்கும், கணீரென்ற குரலுக்கும், இவையனைத்துக்கும் மேலாக அவருடைய எளிமைக்கும் ரசிகன் நான். "சாகித்திய அகாதமி" விருது பெற்ற எழுத்தாளர், தேசிய கப்பல் வாரியத்தின் உறுப்பினர், ஒரு நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி, பல நாடுகளுக்குப் பயணித்தவர், திரைப்பட வசனகர்த்தா என்றெல்லாம் நாம்தான் சொல்லிப் பெருமைப்பட்டுக் கொள்ளவேண்டும். இந்நேரம் அவர் சட்டைக்கூட போடாமல், லுங்கியுடன் வாயில் சுருட்டை வைத்துக்கொண்டு சித்தாள் வேலை பார்த்துக்கொண்டிருப்பார். இல்லையேல் ஆத்தா மடியில் படுத்துக்கொண்டிருப்பார். ஆத்தா என்றால் உயிர் அவருக்கு. உண்மையில் ஆத்தாவின் மீதான அவருடைய இந்த நேசம்தான் அவரையும் என்னையும் இணைத்துவைத்த முதல் புள்ளி என்பேன். இந்த ’அம்மாவின் தேன்குழல்’ அத்தனை நல்ல சிறுகதையா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அது என்னை மகத்தானவர்களுடன் இணைத்து வைத்திருக்கிறது. 
இரண்டு வருடங்களுக்கு முன்பு அவரிடமிருந்து ஒரு கடிதம். என்னுடைய நூலைப் பற்றி அவர் எழுதிய கட்டுரையை அனுப்பி வைத்திருந்தார். அதை வாசித்துவிட்டு நான் எழுதியிருந்த வரிகள் இவை: "என்னுடைய நூலைப் பற்றி அவர் எழுதியுள்ள இந்தக் கட்டுரைக்கு ‘அற்புத வாழ்வின் ஆனந்த அதிர்வு' என்று தலைப்பிட்டிருக்கிறார். உண்மையில் இந்தக் கட்டுரையை வாசித்த பிறகு நான் எழுதியிருக்க வேண்டிய வரி இது! இந்த அதிர்வு அடங்க பல நாட்களாகும் என்று அவருக்கு எழுதியிருந்தேன். முன்னுரையில் வரும் 'ஹெரண்டு பெண்மணியில்' தொடங்கி, தொகுப்பில் பெரும்பாலும் வாசிக்கப்படாத, வாசிக்கப்பட்டிருந்தாலும் பேசப்படாத கடைசிக் கதையான 'புனித யாக்கோபு சதுக்கம்' வரை அவர் எழுதியிருந்தது என்னை வியப்பிலாழ்த்தியது; உவகையளித்தது. இதையெல்லாம் என்னைப் போன்ற இளையவர்களுக்கு அவர் செய்ய வேண்டிய தேவையில்லை. இத்தருணம் அவருடைய பெருந்தன்மை மட்டுமே என் மனதில் விசுவரூபமெடுத்து நிற்கிறது. இந்தக் கட்டுரையை என்னை ஊக்கப்படுத்தவே நிச்சயம் எழுதியிருப்பார். ஆனாலும், எனக்குள் இது ஒரு பெரிய குற்றவுணர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த காலங்களில் அதிகம் எழுதவில்லை. எழுதியவற்றை வெளியிடவும் இல்லை. அறமற்ற செயல் என்றாலும், உண்மையில் அவருக்கு நான் நன்றியே சொல்லப்போவதில்லை. இனி என்னுடைய அடுத்த படைப்பின் மூலமாகவே நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். அதைத்தான் அவரும் விரும்புவார் என்றும் நம்புகிறேன்." இரண்டு வருடங்களாக முகநூலை விட்டு விலகியிருந்தேன். ஆனால், இரண்டு முறை இந்தக் கட்டுரையைப் பகிர்ந்து புத்தகத்தை வாசிக்கச் சொல்லியிருக்கிறார். அதையும் வாசு மூலமாகவே அறிந்துகொண்டேன். என்னுடைய அண்மைய படைப்பான ‘மாயபுரி’ சிறுகதையைப் பற்றி கருத்து தெரிவித்தவர் அவர் மட்டுமே. இதையெல்லாம் அவர் செய்யவேண்டிய அவசியமே இல்லை.
"அவமானமும், அலட்சியமும்தான் நமக்கெல்லாம் அடி உரம்" - அவர் எனக்கு எழுதியிருந்த கடிதம் ஒன்றிலிருந்து இந்த வரிகளை உருவி எடுத்து தாயத்துப் போல் கட்டிக்கொண்டிருக்கிறேன். அவர் உருவத்திலிருந்து ஒரு துளி கம்பீரத்தை எடுத்து இந்த வரிகளில் குழைத்து எனக்கு அனுப்பியிருக்கிறார் என்று தோன்றுகிறது. உயர்ந்த மனிதரய்யா நீர் - உருவம் உள்ளம் இரண்டிலுமே. வாழ்வாங்கு வாழ்ந்து உங்கள் ஆற்றலின் ஒரு துளியை அவ்வப்போது எங்களுக்குத் தருவீராக என்று சுயநலத்துடன் வாழ்த்துகிறேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..