தோப்பில் முகம்மது மீரான்



சமீபத்திய பதிவொன்றில் இவ்வாறு எழுதியிருந்தேன்.
தமிழக இஸ்லாமிய சமூகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்வியலைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? பிரியாணியைத் தவிர! எத்தனைப் படங்கள் அவர்களின் வாழ்க்கையை நேர்மையாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. அப்படியே ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தால் அவற்றிலும் மிகையாக “அல்லா-அருணாசலா" போன்ற செயற்கைக் காட்சியமைப்புகள். சமீபத்தில் நடந்த ஒரு போராட்டத்தின் போது அதில் பங்குபெற்றவர்களுக்கு ஒரு முஸ்லீம் பெரியவர் குடிதண்ணீர் வழங்குகிறார். அந்தப் புகைப்படத்தை புளகாங்கிதத்துடன், "முஸ்லீம் பெரியவரே தண்ணீர் கொடுக்கிறார்" என்று ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த "ரே"-வில் ஒளிந்திருக்கிறது சமூகத்தின் குரூரம். இதில் என்ன விந்தை இருக்கிறது. அவரும் நம்மில் ஒருவர்தானே என்கிற கேள்விதான் எனக்குள் எழுந்தது. ஆனால் அவரை அவ்வாறு இன்னும் பார்க்க ஆரம்பிக்கவில்லை இந்தச் சமூகம். அதற்குப் படைப்பாளிகளின் பங்கு என்ன? மலையாளத்தில் வெளிவந்த "ஆதாமிண்டே மகன் அபு" (மற்றும் எத்தனையோ) படத்தைப் போன்று ஒன்று வந்திருக்கிறதா தமிழில்? 
அது சரி. மற்றவர்களைப் பற்றித்தான் எத்தனைப் படங்களில் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறோம். இந்த விஷயத்தில் இலக்கியவாதிகள் சிறப்பாக பங்காற்றியிருக்கிறார்கள். என் ஆதர்ச எழுத்தாளரான திலீப்குமார் எழுதிய "ஒரு குமாஸ்தாவின் கதை" சிறுகதையை வாசித்துப் பாருங்கள். "உங்கள் பெயர் மெஹபூப் கான்" என்று துவங்கும் அந்தச் சிறுகதையை வாசிக்கையில், நீங்கள் மெஹபூப் கானாகவே வாழ்ந்து, கதையின் இறுதியில் மெஹபூப் கானாகவே சாவீர்கள். தேசிய கீதத்தால் செய்ய இயலாத வேலையை திலீப்குமாரின் ஒரு படைப்பு செய்துவிடும்.
நான் கூறியது போல் இலக்கியவாதிகள் உண்மையிலேயே சிறப்பாக பங்காற்றியிருக்கிறார்கள். அதில் முக்கியமான எழுத்தாளுமை சாகித்ய அகாதமி விருதுபெற்ற தோப்பில் முகம்மது மீரான் அவர்கள். அவரையும் உப்பா பஷீரிண்டே கதைகளையும் படித்ததுதானே வாப்பாக்களைப் பற்றியும் உப்பப்பாக்களைப் பற்றியும் அறிந்துகொள்ள முடிந்தது. 
தோப்பில் முகம்மது மீரான் "அனுபவங்கள்தான் முக்கியம்" என்றவர். புத்தக வாசிப்பின் வாயிலாக கிடைக்கிற அறிவைவிட அனுபவித்து கிடைக்கும் அறிவுதான் கலைக்குத் தேவை. என் தாத்தா பள்ளிக்கூடமே சென்றிராதவர். ஆனால் அவருக்கு அனுபவ அறிவு அதிகம். திருப்பத்தூர் பெரியகடைத் தெருவில் தேநீர் கடை ஒன்றை நடத்தி வந்தவர். இஸ்லாமியர்களின் கடைகள் நிறைந்த பகுதி அது. தேநீர் பருக வரும் வாடிக்கையாளர்களில் பெரும்பாலானோர் இசுலாமியர்களே. என் தாத்தாவும் வெள்ளைத் தாடியுடன் எப்போதும் வெள்ளை ஜிப்பா அணிந்து பார்ப்பதற்கு ஒரு இசுலாமியரைப் போலவே இருப்பார். உருது மொழியிலும் பேசக்கூடியவர். தாத்தாவின் மறைவுக்கு முன்பே என் தந்தை அசைவ உணவு உண்பதை நிறுத்திவிட்டிருந்தார். ஆனாலும் தாத்தாவின் நினைவு நாளன்று அவர் மிகவும் விரும்பிய பெரியக்கடைத் தெரு பாய் பிரியாணியை வாங்கி வந்து ஆத்மார்த்தமாக படைத்திருப்பதை கண்ணுற்றிருக்கிறேன். தாத்தா பிரியாணியை விரும்பியவராக இருந்தாலும் இஸ்லாமிய சழூகத்தைப் பற்றி பிரியாணியைத் தாண்டிய அறிவு பெற்றிருந்தவர். 
எனக்கு அவரளவுக்கு அனுபவம் இல்லை. ஆனால் என் புத்தக வாசிப்பு பரந்து விரிந்தது. தோப்பில் முகம்மது மீரானின் கதையொன்றில் வரும் காலண்டர் பாவா கதாபாத்திரம் நான் சாமியாடி என்றொரு கதையை எழுதுவதற்கு ஒரு அகத்தூண்டுதலாக அமைந்தது. அதை இன்னும் பிரசுரத்துக்கு அனுப்பவில்லை. என் மாமா ஒரு சாமியாடி. அவரிடம் மட்டும் சொன்னேன். பிறைக்கும் மாரியம்மன் திருவிழாவுக்கு தொடர்பு இருக்கின்றதா என்றால் நிச்சயம் இருக்கிறது என்பேன். தேய்வழக்காக சொல்லப்படும் அமாவாசைக்கும் அப்துல் காதருக்கும் என்ன தொடர்பு என்றால் இயற்கைக்கும் மனிதனுக்குமான தொடர்பு என்பேன். பிற சமூகத்தைச் சார்ந்த நேரடியான யதார்த்தமான படைப்புகளை வாசிக்கும் பொழுது அடிப்படையில் அனைவரும் மனிதர்களே என்கிற தரிசனமே எனக்குக் கிடைக்கிறது. அத்தகைய நேர்மையான படைப்புகளே ஒருமைப்பாட்டை வளர்க்கும். பிரியாணி ஜோக்குகளும், அல்லா-அருணாச்சலா கடைகளும், தேசியகீதங்களும் அல்ல. இவையெல்லாம் என்னளவில் பாவனைகள். 
தோப்பில் முகம்மது மீரான் மறைந்துவிட்டார். மனிதநேயம் மிகுந்த அந்தப் படைப்பாளிக்கு இந்நேரம் வானவர்கள் முன்கர், நக்கீர் போன்றோர் 'சாய்வு நாற்காலி' ஒன்றை வழங்கி சாமரம் வீசிக்கொண்டிருப்பார்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..