இருமை என்னும் இருண்மை

இந்துத்துவர்கள், திராவிடச் சிந்தனையாளர்கள், தமிழ் தேசியவாதிகள் என்று அத்தனை வல்லவர்களும் தங்களை எதிர்த்து நிற்கும் பொது எதிரிகளுக்கு அவர்களே வைத்திருக்கும் பெயர் - "நடுநிலை நக்கிகள்". நக்கிகள். ஆகா! எத்தனைக் கருத்தாழம் மிக்கச் சொல்! "இளம் எழுத்தாளர்” பெருமக்கள் பலரும் இதைப் பலமுறை பயன்படுத்தி தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டையும், தமிழ் மொழியின் நீள, அகல, ஆழத்தையும் நெஞ்சை நிமிர்த்தி உலகுக்குப் பறைசாற்றுகிறார்கள். இவர்கள்தான் இன்றைய தமிழ் இளைஞர்களை வழிநடத்திக்கொண்டிருப்பவர்கள். வாழ்க இவர்தம் சமூகத்தொண்டு! வாழ்க தமிழ்! 
"ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால்" என்பதல்ல நடுவுநிலைமை. ஆற்றில் குதித்து நீந்திக் குளிக்கவேண்டிய நேரத்தில் களிப்புற்றிருக்கவும் தெரியவேண்டும், அதே சமயம் அது சீறிப் பாய்ந்து வரும்போது அணை கட்டித் தடுக்கவும் துணிவு வேண்டும். நடுவுநிலைமை என்பது ஒருவித தொடர் செயல்பாடு. சமூகத்து நிகழ்வுகளை தொடர்ந்து பகுப்பாய்வு செய்து மெய்ப்பொருள் காண முயன்றுகொண்டே இருப்பது அது. "வாழ்க்கை என்பது அந்தந்த நேரத்து நியாயம்" என்று ஜெயகாந்தன் சொன்ன அந்த நேரத்து நியாயம் எது என்பதை சிந்தித்து தெரிவுசெய்பவர்களே நடுவுநிலைமையாளர்கள். ஆனால் அங்கேயே தங்கித் தேங்கிவிடாதவர்கள். 
எதன் பொருட்டாவது எதன் மீதாவது சாய்ந்து கிடப்பது என்பது ஒட்டுண்ணி மனநிலை. எந்த எதிர் விமர்சனமும், சந்தேகமும் இன்றி எதையும் எவரையும் முழுமையாக ஆதரிப்பவர்கள் ஆபத்தானவர்கள் என்று சுந்தர ராமசாமி கூறுவார். இந்தியர்கள், குறிப்பாக தமிழர்கள் எளிதில் உணர்ச்சிவசப்படக் கூடியவர்கள்; சமநிலை இழந்துவிடக்கூடியவர்கள். அதற்கு உளவியல் காரணங்கள் இருக்கிறது. அதற்காக மெனக்கெட்டிருக்கிறேன் என்பதால் நன்றாக அறிவேன். சீண்டினால் சேர்ந்துவிடுவார்கள் என்பதை சீண்டுபவர்கள் அறிவார்கள். அதனால் வம்புக்கு இறங்குபவர்களிடம் சமநிலை இழக்காமல் உணர்ச்சிகளை அடக்கி மௌனம் காப்பதே அறிவுடையவர்கள் செய்யக் கூடியது. 
இருமை என்னும் இருண்மைக்குள் சிக்கிக்கொண்டவர்களுக்கு நான் கூற வருவது புரிய வாய்ப்பில்லை. நன்மை-தீமை, உயர்வு-தாழ்வு, சரி-தவறு, திமுக-அதிமுக, கருப்பு-வெள்ளை என்று இருநிலைத்தன்மை உடையவர்கள், இவை இரண்டுக்குமிடையே சாம்பல் பகுதிக்குச் சாத்தியமே இல்லை என்று கருதுபவர்கள். ஆனால் உண்மை அங்குதானிருக்கக்கூடும். ஜெயல்லிதாவின் செயலைப் பாராட்டினால், "இவன் அதிமுக-காரன்". கருணாநிதியைச் சந்தித்தால், "இவன் திமுக-காரன்". ஜெயமோகனுக்குக் கடிதம் எழுதினால் இவன் அவருடைய அடிவருடி. நம் சமூகத்தின் அறிவு, "பனைமரத்தடியில் பால் குடித்தால் கள்" என்கிற எளிய அளவில்தான் இருக்கிறது.
"ஓரஞ் சொல்லேல்" என்று ஒளவையார் சொன்னதை நம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுப்பதோடு நிறுத்திவிடுகிறோம். "ஓரஞ் சேரேல்; சொல்லேல்" என்பேன் நான். இப்படி ஓரம் சேரா மையவாதிகளுக்கு வள்ளுவர் ஒரு பெயர் வைத்திருக்கிறார். "தக்கார்" என்பதுதான் அது. 
தக்கார் தகவிலர் என்பது அவரவர்
எச்சத்தால் காணப் படும்.
எச்சத்தால் காணப் படும் என்கிறாரே, அது என்ன எச்சம் என்று கேட்கிறீர்களா? அது அவரவர் முகநூல் பக்கம். ஒவ்வொருவரின் முகநூல் பக்கத்திலும் ஒரு இருபத்தைந்து பதிவுகளையாவது கவனமாக வாசியுங்கள். தகவிலரை எளிதில் கண்டுகொள்ளலாம். மெய்ப்பொருள் காண முடியவில்லை என்றால் மௌனம் காக்கலாம். தகவிலரின் ஏச்சுப் பேச்சுகளை மதிக்கத் தேவையில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..