கெக்கெ பெக்

சிறுவயதில் யாராவது கோமாளித்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு சிரித்தால் என்னுடைய பாட்டி, "எதுக்குடா அவன் இப்படி கெக்கே பெக்கெனு சிரிக்கிறான்" என்பாள். அதற்குப் பொருள் என்னவென்று பாட்டியிடம் கேட்டதில்லை. கிறுக்குத்தனமாக முகத்தை வைத்துக்கொண்டு சிரிப்பதைத்தான் அப்படி சொல்கிறாள் என்றே புரிந்து கொண்டோம். வியப்பு என்னவென்றால், "கெக்கெ பெக்" (Gekke Bek) என்பது டச்சு மொழியில் இன்று வரை பயன்பாட்டில் இருக்கும் ஒரு மரபுவழி சொற்றொடர்.
பெல்கியத்துக்கு வந்த ஆரம்பத்தில் நான் செய்த முதல் காரியம், கல்லூரியில் சேர்ந்து மாலைவேளைகளில் டச்சு மொழி பயின்றதுதான். அதில் சிறப்பு என்னவென்றால், இங்கு மொழி வகுப்புகளை பிறிதோர் மொழியின் துணையின்றியே எடுக்கிறார்கள். அதனாலேயே புகைப்படங்களையும் வரைபடங்களையும் அதிகமாகப் பயன்படுத்துவார்கள். சில சமயங்களில் ஆசிரியர்கள் நடித்தும் காட்டுவார்கள்.
இதற்கான காரணங்களாக நான் காண்பவை இரண்டு:
1. பிற மொழிகளின் உதவியோடு ஒரு மொழியைக் கற்றுக் கொடுக்கும் போது நமக்குள் எப்போதும் ஒரு ஒப்பீடு நடந்து கொண்டே இருக்கும். ஆங்கிலத்தைக் கொண்டு டச்சு மொழியைக் கற்றுக் கொள்வது மிகவும் கடினம். உச்சரிப்பிலேயே சிக்கல் அதிகம் இருக்கும். இத்தனைக்கும் ஆங்கிலமும் டச்சு மொழியும் அடிப்படையில் ஜெர்மானிய மொழிகள். தனிப்பட்ட முறையில், தமிழோடு ஒரு ஒப்பீடு செய்துகொண்ட பிறகே என்னால் டச்சு மொழியில் ஒழுங்காக உச்சரிக்க முடிந்தது. உதாரணத்துக்கு, “school” என்கிற டச்சு சொல்லை “ஷ்கோல்” என்றே உச்சரிக்க வேண்டும். தமிழ் மொழியின் குறில் நெடிலுடன், "ஒ" (o), "ஓ" (oo) என்றும், “எ” (e), “ஏ” (ee) என்றும் ஒரு ஒப்பீட்டைச் செய்துகொண்ட பிறகு டச்சு மொழியில் உச்சரிப்பது மிகவும் எளிதாகி விட்டது.
2. மொழி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் பெரும்பாலும் பிற ஐரோப்பிய நாடுகளிலிருந்து வருபவர்கள். அவர்களில் பலருக்கு (அனைவருக்கும்) ஆங்கிலமே தெரியாது; வராது. ஆங்கிலத்தை வியந்தோதி தலையில் தூக்கிவைத்துக் கொண்டு ஆடுவதற்கு இது இந்தியா இல்லையே. பொது மொழி என்று எதுவுமில்லாததால் கற்கும் மொழியே கற்றல் மொழியாகவும் இருக்கிறது. பிற மாணவர்களுக்கு ஆங்கிலம் தெரியாததால் அவர்களுடன் பேசுவதற்கு ஒரே வழி டச்சு மொழியில் பேசுவதே. இதனாலேயே பெரும்பாலானவர்கள் விரைவில் மொழியைக் கற்றுக்கொண்டு பேச ஆரம்பித்து விடுகிறார்கள். இந்தியர்களைத் தவிர. நாம் “தமிழ் வாழ்க” என்று உரக்கக் கத்திக்கொண்டு தமிழையே ஒழுங்காகக் கற்றுக்கொண்டதில்லை.
கெக்கெ பெக்கேவிற்கு வருவோம். வரைபடங்களைக் கொண்டு சொல்லித் தருவார்கள் என்று சொன்னேன் அல்லவா. பயிற்சி வகுப்புகளின் போது எல்லோருக்கும் அட்டைகளைக் கொடுப்பார்கள். அந்த அட்டைகளில் வரைபடமும் அதற்குக் கீழே ஒரு சொல்லையோ அல்லது சொற்றொடரையோ எழுதியிருப்பார்கள். ஒரு மாணவன் அந்த வரைபடத்தில் இருப்பது போல நடித்துக் காட்ட, இன்னொரு மாணவன் அந்தச் சொல்லை சரியாக உச்சரிக்க வேண்டும்.
அப்படிப்பட்ட பயிற்சியின்போதுதான் எனக்கு கெக்கெ பெக்கென்று சிரிக்கும் ஒரு சிறுவனின் புகைப்படத்துக்குக் கீழே "கெக்கெ பெக்" என்று எழுதிய அட்டை வந்தது. அதைப் பார்த்தவுடன் எனக்கு பெரும் வியப்பு. என்னுடைய உச்சரிப்பைக் கேட்ட ஆசிரியை கத்லேன் (கத்லீன் அல்ல), "அருமையாக உச்சரிக்கிறாய்" என்றார். (ஏனெனில் “கெ”-வை ஆங்கில “Ge” என்றல்லாமல் “Khe” என்றே உச்சரிக்க வேண்டும். “hKhe” என்று உச்சரித்தால் இன்னமும் சரியாக இருக்கும்.)
நானோ, "கத்லேன், இது ஒரு தமிழ் வார்த்தை. என் பாட்டி இப்படித்தான் உச்சரிப்பாள்" என்றேன்.
நான் சொன்னதைக் கேட்டு எல்லோரும் உரக்கச் சிரித்தார்கள். பிறகு நான், "இந்தியாவில் எங்களுடைய கிராமத்தில் இருக்கும் பாட்டி அடிக்கடி பயன்படுத்திய சொற்றொடர் இது" என்றேன். கத்லேனுக்கு பெரும் வியப்பு. எனக்கும்தான்.
“GEK” என்றால் கிறுக்குத்தனம். “BEK” என்பதன் உண்மையான பொருள் அலகு, ஆனால் இந்த இடத்தில் வாய் என்று பொருள் கொள்ள வேண்டும். வாயைக் கோணி கிறுக்குத்தனமாக வைத்துக்கொள்வது என்பதே இதன் பொருள். இன்றளவும் பல டச்சுக் கதைகளில் தேய்வழக்காக பயன்படுத்தப்படும் சொற்றொடர் இது. அண்மையில்கூட அதிபர் ட்ரம்பின் கெக்கெ பெக் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருந்தார் நண்பர் ஒருவர்.
பாட்டி எப்படி இதை அறிந்து வைத்திருந்தாள் என்று எனக்கு குழப்பமாக இருந்தது. பாட்டி மட்டுமல்ல அம்மாவும் இதை அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறேன். பிறகுதான் ஒரு தெளிவு கிடைத்தது. இலங்கை கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலாக டச்சுக் காலனியாக இருந்து வந்துள்ளது. எனவே இந்த "கெக்கே பெக்" இலங்கைத் தமிழர்கள் மத்தியில் பயன்பாட்டில் இருந்து, அவர்கள் மூலமாகவே தமிழகத் தமிழர்களிடம் பரவியிருக்க வேண்டும் என்பது என் அநுமானம்.
காலனியாதிக்கம் நமக்கே தெரியாமல் என்னவெல்லாம் செய்திருக்கிறது பார்த்தீர்களா? அதிருக்கட்டும். ஒரு கேள்வி. கெக்கே பெக்கென்று சிரிக்கிறான் என்பதை தமிழில் எப்படிச் சொல்வது?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..