பிக்காஸோவின் மர்மம்


ஹென்றி க்ளூஸோவும், பாப்லோ பிக்காஸோவும் இணைந்து உருவாக்கியுள்ள "பிக்காசோவின் மர்மம்" என்கிற ஆவணப்படம் பார்த்தேன். 1956-ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படம் அதே ஆண்டு கான் திரைப்பட விழாவில் சிறப்பு விருதைப் பெற்றுள்ளது. அதற்கு ஆறு ஆண்டுகளுக்கு முன்பே பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பௌல் ஹாஸார்ட்ஸ் என்கிற இயக்குநர் பிகாஸோவை வைத்து டச்சு மொழியில் ஒரு ஆவணப்படம் எடுத்திருக்கிறார். வலோரிஸிலுள்ள பிகாஸோவின் ஸ்டூடியோவிலேயே எடுக்கப்பட்ட அந்தப்படம் அவ்வளவு பிரபலமடையவில்லை.
ஓவியத்தில் நாட்டமுள்ளவர்கள், குறிப்பாக பிக்காஸோ ஓவிய ரசிகர்கள், பிக்காஸோவின் மர்மத்தை MUBI தளத்தில் பார்க்கப் பரிந்துரைக்கிறேன். இயக்குநரான க்ளூஸோவும் படத்தில் வருகிறார். எனக்கும் சமகாலப் படைப்பாளிகளின் ஆவணப்படங்களை எடுக்கவேண்டும் என்கிற ஆசை நீண்ட காலமாகவே இருந்து வருகிறது. ஓவியர் மருதுவின் ஆவணப்படம்கூட எடுக்கலாம். அவருடைய ஓவியங்களிலும் பிக்காஸோ ஓவிய பாணியின் தாக்கம் இருக்கும்.

குறிப்பாக தமிழ் எழுத்தாளர்களின் ஆவணப்படங்களை எடுக்க வேண்டுமென்பது என் விருப்பம். அசோகமித்திரன் மிகச் சிறிய தாள்களில் இடத்தை கொஞ்சமும் வீணடிக்காமல் நெருக்கி நெருக்கி சிக்கனத்துடன் கதைகளை எழுதி இதழ்களுக்கு அனுப்புவாராம். ஒருவேளை இந்த சிக்கன உனர்வுதான் அவருடைய சிறுகதைகளின் வெற்றிக்கே காரணம் என்றுகூட எண்ணியிருக்கிறேன். "பெரியவரே இரயில் நிலையத்துக்கு வந்திருந்தார்" என்கிற வரியில் "பெரியவரே" என்பதற்கான விளக்க வரிகளை வாசகர்களாகிய நாம்தான் எழுதிக்கொள்ள வேண்டும். ஆனால் அவர் சிக்கனத்துடன் கதை எழுதும் காட்சியைக் கொண்ட ஆவணப்படம் ஒன்றாவது இருக்கிறதா? தொழில்நுட்பத்தில் எங்கோ சென்றுவிட்டோம் என்று மார்தட்டிக் கொள்வதில் பயனெதுவும் இல்லை. முகநூலில் வம்பளந்து கொண்டிருக்கும் நேரத்தில் மூன்று ஆவணப்படங்களை கைபேசியிலேயே எடுத்து விடலாம்.

பிக்காஸோவின் மர்மத்தில் அவர் ஓவியம் வரைவதை நேரடியாகப் பதிவு செய்திருக்கிறார் க்ளூஸோ. அந்த ஓவியங்கள் திரைப்படத்தில் மட்டுமே இருக்க வேண்டுமென்று விரும்பி அவற்றை முற்றாக அழித்து விட்டார்களாம். அவர் வரைந்துத் தள்ளியிருக்கும் முப்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஓவியப் படைப்புகளையும் சிற்ப வேலைப்பாடுகளையும் முழுவதுமாகப் பார்த்து முடிக்கவே நமக்கு ஆயுட்காலம் போதாது என்றிருக்கையில் இந்தப் பத்து ஓவியங்களை அழித்ததன் தர்க்கம் எனக்குப் புரியவில்லை. சரி, சன் டிவி பாணியில் இதுவரை நீங்கள் பார்த்திராத சில பிக்காஸோ ஓவியங்களை இந்தப் படத்தில் பார்க்கலாம் என்று சொல்லிக் கொள்ளலாம். அதிலும் அந்தக் கடைசி இருபது நிமிடங்களில் மனிதர் மாயாஜாலத்தையே நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.

"கலை விமர்சகர்கள் ஒன்று கூடும்போது, அவர்கள் வடிவம், அமைப்பு மற்றும் பொருள் பற்றி பேசுகிறார்கள். கலைஞர்கள் ஒன்று சேரும்போது, மலிவான வர்ண எண்ணெய் எங்கு வாங்கலாம் என்பதைப் பற்றி பேசுகிறார்கள்." - பாப்லோ பிக்காஸோ.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..