மகிழ்ச்சியான வாழ்வுக்கான வழிகள்


ராம், ஆன்ட்வெர்ப், பெல்ஜியம்.

கேள்வி: மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வதற்குத் தேவையான ஐந்து முக்கியமான வழிகள்?

பதில்:

நூல்களை வாசித்துவிட்டு நிறைய பேர் ஐந்து-பத்து என்று இதுபோன்று பட்டியல்களை வெளியிடுகிறார்கள், ராம். சுயமேன்மை நூல்களை ஒதுக்கி விட்டு இலக்கியத்துக்குள் நான் நுழைந்ததற்கான காரணமே இதுதான். அங்கு சிறிதளவேனும் உண்மை இருப்பதாக எனக்குப் படுகிறது. என்னுடைய அனுபவத்திலிருந்து சில வழிகளை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். ஆனால் இந்தப் பட்டியலில், நான் உட்பட வழக்கமாக எல்லோரும் சொல்லும் நூல்களை வாசித்தல், திரைப்படம் பார்த்தல், பயணங்கள் புரிதல், அறச் செயல்கள், தியானம் செய்தல் போன்ற வழிகளையெல்லாம் பட்டியலிட விரும்பவில்லை.

அவையெல்லாம் போலச் செய்பவர்களுக்கும், உறுதிப்படுத்தல் சார்பு மனநிலையுடையவர்களுக்கும் (Confirmation Bias) ஒருவேளை திருப்தியளிக்கலாம். நாற்பது வருடங்களாக தொடர்ந்து தியானம் செய்து "அமைதி கிலோ என்ன விலை?" என்று கேட்கும் மூர்க்கர்களையும் பார்த்திருக்கிறேன். தியானம் என்றால் என்னவென்றே தெரியாத நண்பர்கள் சிலர் சாந்த சொரூபிகளாக வாழ்ந்துகொண்டிருப்பதையும் கண்ணுற்றிருக்கிறேன். எனவே, உங்களிடம் நான் நேர்மையாகப் பகிர்ந்துகொள்ள விளைவது என் அனுபவங்களை மட்டுமே.

ஒன்று - 

மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு வழிகளாக பிறர் கூறும் வழிகளை வாசிப்பதைத் தவிர்த்து விடுங்கள்.  உங்களுடைய மகிழ்ச்சிக்கான வழிகளை நீங்கள்தான் கண்டடைய வேண்டும். உங்களுக்கு எவையெல்லாம் பிடிக்கிறதோ அவற்றையெல்லாம் எவர் தடுத்தாலும் கைவிடாமல் தொடருங்கள். ஆனால் அவையெல்லாம் உண்மையிலேயே உங்களுக்கு மகிழ்ச்சி தரும் விஷயங்களா அல்லது பிறரால் உங்கள் மீது திணிக்கப்பட்டதா என்பதை மட்டும் பரிசோதனைக்கு உட்படுத்திப் பார்க்கவும்.

இரண்டு - 

மற்றவர்களிடம் எதிர்பார்ப்புகளை குறைத்துக்கொள்ளுங்கள்.  எதிர்பார்ப்புகள் ஏமாற்றத்தைத் தரும். பிறரை திருப்திப்படுத்துவதிலும் நேரத்தை செலவழிக்கக் கூடாது. பிறரிடமிருந்து கிடைக்கும் மகிழ்ச்சி நிலையானதும் அல்ல. அதனால்தான் எனக்கான மகிழ்ச்சிக்கான ஊற்றை எனக்குள்ளேயே உருவாக்கி அதிலிருந்து பெற்றுத் திளைக்கிறேன். உங்கள் வாழ்க்கையை மற்றவர்களின் கையில் கொடுத்து விடாதீர்கள். உங்கள் முடிவுகளை நீங்களே எடுங்கள். உங்கள் செயல்களுக்கான விளைவுகளை நீங்களே எதிர்கொள்ளும் துணிவை வளர்த்துக்கொள்ளுங்கள். பிறர் மீது எதிர்பார்ப்புகள் வைத்துக்கொள்வது மட்டுமல்ல, பழி போடுதலும் அவசியமற்றது.

மூன்று  -

மகிழ்ச்சியை ஒரு குறிக்கோளாக வைப்பதைத் தவிர்த்து விடுங்கள். அது எனக்கு அபத்தமாகவே படுகிறது. வாழ்க்கையில் மகிழ்ச்சி, சோகம் என்று எல்லாமும் இருக்க வேண்டும். எல்லாவற்றையும் ரசிக்க வேண்டும். சோகமற்ற வாழ்க்கையை என்னால் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. மகிழ்ச்சியான வாழ்வு என்பது சோகமற்ற வாழ்வு என்பதாகாது. ஒளியின் அழகை இருட்டால்தான் காண்பிக்க முடியும். வெப்பத்தின் அருமையை குளிரால்தான் உணர்த்த முடியும். இசையின் இனிமையையும், நுட்பத்தையும் அமைதியால் மட்டுமே அடையாளம் காட்ட முடியும். அது போலவே மகிழ்ச்சியை சோகத்தால் மட்டுமே அடையாளம் காட்ட முடியும். சோகத்தில் மூழ்கி இருப்பது எந்த அளவுக்கு நல்லதில்லையோ அதே அளவுக்கு மகிழ்ச்சியில் திளைத்து இருப்பதுவும் நல்லதல்ல என்பது என் எண்ணம்.

நான்கு -

எதிலுமே தீவிரமாக இருப்பதைத் தவிர்த்தல் நலம். வீணையின் நரம்புகள் தளர்ந்திருந்தால் மீட்டி இசையெழுப்ப முடியாது; அதிக இறுக்கத்துடன் இருக்கையில் மீட்டினாலோ நரம்புகள் அறுந்து விடும். இரண்டுக்கும் இடைப்பட்ட நிலையில்தான் நல்லிசை உருவாகிறது. இது புத்தன் ஸ்ரவணனுக்குச் சொன்னது. 'மிதமே இதம்' என்பது என்னுடைய புதிய பாதையல்ல. புத்தனின் பழைய பாதை. ஆனால் மிகவும் கடினமான பாதை. நானுமே போராடிக்கொண்டுதான் இருக்கிறேன்.

இறுதியாக, 

எக்காரணத்தைக் கொண்டும் உங்களை யாருடனும் ஒப்பிட்டுப் பார்க்காதீர்கள். உங்கள் பயணம் மற்றவர்களின் பயணத்திலிருந்து முற்றிலும் வேறுபட்டது; ஒப்பிட முடியாதது. உங்களின் இன்றைய தினத்தை நேற்றைய தினத்துடன் ஒப்பிட்டுப் பார்த்து மகிழ்ச்சி கொள்வதே சரி. வேண்டுமானால் உங்கள் வாழ்க்கையை உங்களுக்கு முன்னவர்களான தந்தை, தாத்தா போன்றவர்களுடன் ஒப்பிட்டுக் கொள்ளலாம். ஒரே பயணத்தின் வெவ்வேறு புள்ளிகளே நீங்கள் என்பதால் இதைச் சொல்கிறேன். ஆனால் அதைக்கூட தவிர்த்து விடுதல் நலம். அவர்களுடைய வாழ்க்கையின் தொடர்ச்சியே உங்கள் வாழ்க்கையாக இருந்தாலும், அதுகூட முற்றிலும் ஒப்பிடக் கூடியதல்ல. எனவே, உங்களுக்கே  உங்களுக்கான வாழ்க்கையை வாழுங்கள். உங்களுக்கே உங்களுக்கான பந்தயத்தில் ஓடுங்கள்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..