"கிக் or கிண்டில்?"

டந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் ப்ருஸல்ஸ் நகர புத்தக அங்காடிகளிலும், அமேசான், போல் போன்ற தளங்கள் ஊடாகவும் கிட்டத்தட்ட இருபத்தைந்து புத்தகங்கள் வாங்கினேன். எல்லாவற்றையும் மே மாத இறுதிக்குள்ளாகவே வாசித்து முடித்துவிட்டார் மகர். மூன்று வாரங்களுக்கு முன்பே அடுத்து வாங்க வேண்டிய புத்தகப் பட்டியலைத் தயார் செய்து அனுப்பி விட்டான். அதுபற்றி எனக்குத் தொடர்ந்து நினைவூட்டிக்கொண்டே இருந்தான். சில இணையதள இணைப்புகளைக் கொடுத்து நாட்டுப்புறக் கதைகளை வாசிக்கச் சொன்னேன். ஆனால் அவனுக்கு என்னைப் போலவே புத்தகத்தைக் கையில் ஏந்தி வாசிக்கவே பிடித்திருக்கிறதாம்.
பத்து நாட்களுக்கு முன்பே அமேசானில் அவன் கேட்டிருந்த புத்தகங்களை ஆர்டர் செய்தேன். ஆனால் இந்த முறை சற்று தாமதமாகவே வந்து சேர்ந்திருக்கிறது. அதிலும் லெஃப் தல்ஸ்தோயின் குழந்தைகளுக்கான கதைகள் உட்பட நான்கு புத்தகங்கள் இன்னும் வந்து சேரவில்லை. இவற்றையெல்லாம் இந்தியாவில் ஐந்தாயிரம் ரூபாய்க்கும் குறைவான செலவில் வாங்கியிருக்கலாம். இங்கு கிட்டத்தட்ட பதினாறாயிரம் ரூபாய் செலவாகியிருக்கிறது. வழக்கமாக வருடத்திற்கொருமுறை இந்தியா வரும்போது ஒரு பெட்டி நிறைய புத்தகங்கள் வாங்கி வருவது வழக்கம். இந்த வருடம் தாயகம் பக்கமே தலை காட்ட முடியாதபடிக்குச் செய்துவிட்டது இந்தக் கொடுங்கொரோனா.
எனக்கும் மூன்று புத்தகங்கள் வாங்கினேன். அதில் சித்தார்த்தா மட்டுமே வந்து சேர்ந்திருக்கிறது. அதன் அட்டையின் தரமும் வடிவமைப்பும் அட்டகாசம். பட்டுத் துணியால் செய்யப்பட்டது போன்று தடவும்போது அவ்வளவு மென்மையாக இருக்கிறது. மிகையே இல்லை. புத்தகத்தை அச்சடிக்கச் சொன்னால் நெய்திருக்கிறார்கள். என்னுடைய அடுத்த புத்தகம் இந்தத் தரத்தில்தான் இருக்க வேண்டும். புத்தகத்தை வாசிப்பதுவும், புதிய புத்தகத்தின் வாசமும் எனக்குப் பிடிக்கும். அந்த வரிசையில் இப்போது புத்தகத்தின் ஸ்பரிசமும். Wah!
ஆனாலும் நான் மெதுவாகக் கிண்டிலுக்கு மாறி வருகிறேன். ஆரம்பத்தில் சற்று கடினமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை. நான் காலத்துக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள விரும்புபவன். அதே சமயம் அதில் முற்றிலும் தொலைந்து விடாமல் பழமையையும் ரசிப்பவன். புத்தகத்தைக் கையில் ஏந்திக்கொண்டு சாய்வு நாற்காலியில் அமர்ந்து வாசிக்கும் போது கிடைக்கும் 'கிக்', கிண்டில் புத்தகங்களில் கிடைக்க வாய்ப்பில்லை. புதிய புத்தகங்களின் வாசம் எனக்கு மிகவும் பிடிக்கும் என்றேன். கடந்த முறை புதிய புத்தகங்கள் வீட்டுக்கு வந்ததும் பிரித்துப் பார்த்த என் மகன் என்னைப் போலவே அவற்றை முகர்ந்து, "புத்தகத்தின் வாசமே தனி அப்பா" என்று சொன்னதைக் கேட்டு ஆடிப் போய்விட்டேன். மரபணுவினூடே என்னவெல்லாம் கடத்தப்பட்டிருக்கிறது பாருங்கள்.
கிண்டில் புத்தகங்களில் நிறைய நன்மைகளையும் நான் காண்கிறேன். புத்தகங்களின் விலை குறைவாக இருக்கிறது. எங்கு சென்றாலும் புத்தகங்களை மூட்டை கட்டிக்கொண்டு செல்லும் என் போன்ற புத்தகப்ரியர்களுக்கு கிண்டில் ஒரு வரம். மேலும், முக்கியமான தகவல்களையோ மேற்கோள்களையோ தேடுவதற்கும் எளிதாக இருக்கிறது. அயலகத்தில் வாழ்வதால் நினைத்த சமயத்தில் தமிழ் புத்தகங்களை வாங்க முடிவதில்லை என்கிற வருத்தம் எனக்கு எப்போதும் உண்டு. ஆனால் தற்போது தமிழ் கிண்டில் புத்தகங்களையும் உடனே தரவிறக்கி வாசிக்க முடிகிறது. காலச்சுவடு போன்ற பதிப்பகங்கள் சில நல்ல புத்தகங்களின் கிண்டில் பதிப்பைக் கொண்டு வந்திருக்கிறார்கள். எல்லா பதிப்பகங்களும் கிண்டில் பதிப்பைக் கொண்டு வர வேண்டும். வெறும் மின்னூலாக இல்லாமல் அவற்றை சிறப்பாகக் கொண்டு வர முயல வேண்டும். பிறமொழி, குறிப்பாக ஆங்கிலப் புத்தகங்களை பதிப்பிக்கும் புகழ்பெற்ற பதிப்பகங்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளலாம்.
கொரோனாவினால் இங்கே எல்லா பொது நிகழ்வுகளும் ரத்து செய்யப்பட்டிருந்தாலும் அவற்றில் பெரும்பாலானவை ஆன்லைனிலேயே நடத்தப்பட்டன. நானே அப்படி ஒரு கருத்தரங்கில் கலந்துகொண்டேன். வெர்ச்சுவலாக வரவேற்பறையெல்லாம் அமைத்து அசத்தியிருந்தார்கள். எங்கள் சர்வதேச கூட்டமைப்பின் மூலமாக அப்படி இரண்டு கருத்தரங்கங்களை நாங்களே நடத்தவும் செய்தோம். தாயகத்தில் புத்தக விழாக்களெல்லாம் ரத்து செய்யப்பட்டு வருவதைப் பார்க்கிறேன். அதற்குப் பதிலாக, தமிழகத்திலுள்ள அனைத்து புத்தக விழாக்களும் ஈகோவை விட்டொழித்து கைகோர்த்து ஒரு மாபெரும் "VIRTUAL BOOK FAIR" ஒன்றை ஏன் நடத்தக்கூடாது? உலகம் முழுவதுமிருந்தும் தமிழ் வாசகர்கள் கலந்துகொள்ள வாய்ப்பிருக்கிறது. அவ்வளவு ஏன், இது வரை எந்தப் புத்தகச் சந்தைக்கும் சென்றிராதவர்கள்கூட புத்தகம் வாங்க வாய்ப்பிருக்கிறது. ஒவ்வொரு பின்னடைவிலும் ஒரு வாய்ப்பு ஒளிந்திருக்கிறது. அதை நாம்தான் தேடிக் கண்டடைய வேண்டும்.
தாய்லாந்து நாட்டு புத்தக வெளியீட்டாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கமான 'புபாட்' கடந்த ஏப்ரல் மாதம் ஆன்லைன் புத்தக விழாவை நடத்தியது. ஆனால் அந்த இணையதள வடிவமைப்பு என்னை அவ்வளவாக ஈர்க்கவில்லை. கோலாலம்பூர் சர்வதேச ஆன்லைன் புத்தக விழா இணையதளமும் அப்படியே. இணையதள வடிவமைப்புக்கான யோசனைகள் கைவசம் நிறைய இருக்கிறது. நண்பர்கள் விரும்பினால் ZOOM வழியாகவோ, பேஸ்புக் லைவிலோ உரையாடலாம். தொழில்நுட்பம் எங்கோ சென்றுகொண்டிருக்கிறது. மக்களுக்கு அது சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, வேண்டிய உதவிகள் செய்தால் India UnIncorporation நிச்சயமாக India Incorporation-ஐ தூக்கிச் சாப்பிட்டு விடும். ஆனால் நடந்துகொண்டிருப்பது என்னவோ இதற்கு நேர்மாறானதே.
சிறுதொழில் செய்வோர் நிபுணர்களின் உதவியை நாடிச் செல்வதில்லை. ஈகோ ஒரு காரணம். தயக்கம் வியாபாரிகளுக்கு இருக்கக்கூடாத ஒரு குணம். பிறரிடமிருந்து அறிவைப் பெற்றுக்கொள்ளும் விஷயத்தில் நான் என்றுமே பிச்சைக்காரன்தான். வெட்கப்படவே மாட்டேன். காணாதது கடலளவு. இறுமாப்புடன் அமர்ந்து கொண்டிருந்தால் இழப்பு நமக்குத்தான். ஜுராஸிக் யுகத்தில் வாழ்ந்த டைனோஸர்கள் இன்று இல்லை. ஆனால் அதே யுகத்து கரப்பான் பூச்சிகள் இன்றும் நம்மிடையே குதூகலத்துடன் வாழ்ந்து வருவது எப்படி என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். எல்லோரும் கருதுவதுபோல் இந்த யுகம் வலிமையானவர்களுக்கும் அறிவாளிகளுக்குமானது அல்ல. மாற்றத்தை அரவணைத்துச் செல்பவர்களுக்கானது. கொரோனா இதற்கு ஒரு உதாரணம். தொடர்ந்து ம்யூடேட் ஆகிக்கொண்டே இருக்கிறதாம். எனவே நாம் விரும்புகிறோமோ இல்லையோ டிஜிட்டல் யுகத்துக்கு ஏற்றவாறு நம்மை மாற்றிக்கொள்ளத் தயாராக வேண்டும். இல்லாவிட்டால் தோல்வியை ஏற்றுக்கொள்வதற்குத் தயாராக வேண்டியதுதான்.
சரி, தலைப்பில் கேட்ட கேள்விக்கு பதில் என்னவென்று கேட்கிறீர்ர்களா? எனக்கு கிக்கும் வேண்டும் கிண்டிலும் வேண்டும். ஆனால், நான் நிச்சயம் டைனோஸர் இல்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..