மதச் சண்டை

பெல்கியத்துக்கு வந்த ஆரம்ப நாட்களில், வாரத்திற்கொருமுறை துணிகளை மூட்டையாகக் கட்டிக்கொண்டு சலவையகங்களுக்குச் செல்வதுண்டு. எங்கு சென்றாலும் கூடவே ஒரு புத்தகத்தை எடுத்துச் செல்வது என் வழக்கம். ஆனால் அங்கு பல சுவாரசியமான உரையாடல்களை கேட்கும் வாய்ப்பு ஓரிரு முறை கிடைத்தவுடன், அவற்றை நழுவ விட்டுவிடக் கூடாது என்பதால் புத்தகத்தை எடுத்துச் செல்வதை நிறுத்திவிட்டேன். சலிப்பூட்டும் உரையாடல்களாக இருந்தால் வெளியே சென்று புல்வெளியில் படுத்துக்கொண்டே வானம் பார்க்க ஆரம்பித்து விடுவேன். அப்போதெல்லாம் கைப்பேசியில் கிண்டில் கிடையாதே.
அப்போது நான் வசித்து வந்த லூவன் ஒரு மாணவர் நகரம். உயர்கல்வி பயில்வதற்காக பல தேசங்களிலிருந்து மாணவர்கள் புகழ்பெற்ற லூவன் பல்கலைக்கழகத்தை நோக்கிப் படையெடுக்கிறார்கள். அதனாலேயே லூவன் எப்போதும் குதூகலமாகவும் உயிர்ப்புடனும் இருக்கும்.
ஒருமுறை சலவையகத்தில் நான்கு மாணவர்கள் மத ரீதியாகச் சண்டைப் போட்டுக்கொண்டிருந்தார்கள். அந்த உரையாடலைக் கேட்டுக் கொண்டிருந்த என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை. அதில் ஒருவர்கூட இந்தியரில்லை என்பதால் ஐந்தாவது ஆளாக நானும் சேர்ந்து அவர்களுடன் சண்டை போடலாமா என்றுகூட தோன்றியது. அதற்குத் தேவையான சரக்கு என்னிடமும் நிச்சயமாக அளவுக்கதிகமாகவே இருக்கிறது என்று பெருமையுடன் சொல்லிக்கொள்ள முடியும்.
என்ன சண்டை என்று கேட்கிறீர்களா? தங்கள் மூன்று மதங்களிலும் எது மோசமான மதம் என்பதுதான் சண்டையே. இது அன்றாடம் சமூக ஊடகங்களில் பார்க்கக் கூடிய சண்டைதானே. இதிலென்ன விந்தையிருக்கிறது என்று உங்களுக்கு கேள்வி எழலாம். விந்தையையென்னவென்றால் ஒவ்வொருவருவரும் தன்னுடைய மதம்தான் கோமாளித்தனமானது, மோசகரமானது, நாசகரமானது என்று வேடிக்கையாகப் பேசிக்கொண்டிருந்தார்கள். ஒருவன் தன்னுடைய மதத்திலிருக்கும் மோசமானதொரு சடங்கைப் பற்றி சொன்னால், இன்னொருவன் தன் தரப்புக்கு அவனுடைய மதத்தில் இருக்கும் அதைவிடக் கேவலமான சடங்கைப் பற்றி சொல்லி அங்கு ஒரே சிரிப்பலை. அங்கு அமர்ந்திருந்த எல்லோருமே ஒரு நகைச்சுவை நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருப்பது போன்று சிரித்துக் கொண்டிருந்தோம்.
ஆனால் இது போன்றதொரு உரையாடலை இந்தியச் சூழலில் இன்றைக்கு மெத்தப் படித்த கோமான்களிடம்கூட நிகழ்த்த முடியாது. அவ்வளவு இறுகிக் குறுகிப் போயிருக்கிறோம் நாம். இதுபோன்றதொரு கனவு உரையாடலை என்னுடன் நிகழ்த்தப் போகும் வெவ்வேறு மதத்தைச் சார்ந்த ஐந்து இந்திய நண்பர்களை என் வாழ்நாள் முடிவதற்குள் பார்த்துவிட வேண்டும் என்று அன்று மாலை ப்ரியாவிடம் சொல்லிக்கொண்டிருந்தேன். ஆனால் அது வெறுங்கனவாகவே முடிந்துவிடும் போலிருக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..