சாத்தானின் அப்பம்

யேசு கிறித்துவை அதிகமாக நேசித்த சீடன் சீமோன் இஸ்காரியோத்தின் மகனாகிய யூதாஸே. தன்னுடைய ஜீவனை உலகுக்காக தியாகம் செய்வதாக அறிவித்த கிறித்துவுக்காகத் தன் ஜீவனைத் தந்தவன் யூதாஸ் மட்டுமே. அத்தகைய நல்மனம் துரோகிகளுக்கு மட்டுமே வாய்க்கிறது. உண்மையில் துரோகிகள் நேசிக்கப்பட வேண்டியவர்கள். ஏனெனில் அடிப்படையில் அவர்கள் அன்பானவர்கள்; நண்பர்கள். தம் நண்பர்களை மிகவும் நேசிப்பவர்கள். ஆனால் அவர்களைக் காட்டிலும் தங்களை நேசிப்பவர்கள்.
துரோகத்துக்கான காரணம், தங்கள் மீதான இந்த அன்பின் மிகுதிதான். துரோகத்தின் ஆதாரம் வெறுப்பு அல்ல. ஒருவன் தன் மீது தான் கொண்ட அன்பு; தற்காமம். தற்காமம் சாத்தானின் உணவு. அது நிரம்பியிருக்கும் இடத்தில் சாத்தான் பெரும் பசியுடன் நுழைகிறது. இயேசு கிறித்து அப்பத்தைக் கொடுத்ததால்தான் யூதாசுக்குள் சாத்தான் நுழைந்தது என்றுரைப்பது அறிவீனம். உண்மையில் சாத்தானுக்கான உணவு யாரிடம் அதிகம் இருக்கிறது என்பதையே பிற சீடர்களுக்கு கிறித்து காட்டிக் கொடுக்கிறார். இறுதி இராவுணவின் போது, "நான் உங்களை நேசிப்பது போல, நீங்கள் உங்களை நேசிப்பது போல, பிறரை நேசியுங்கள்" என்று அவர் கூறியது இதன் பொருட்டே.
தன்னைக் காட்டிலும் பிறரை நேசிப்பவன் பிறருக்கு துரோகம் இழைக்க வாய்ப்பில்லை. ஆனால் இந்த பாடத்தைக் கற்றுக் கொள்வதற்குத் தேவையான பொருளீட்ட யூதாஸ் துரோகமிழைக்க வேண்டியிருந்தது. முப்பது வெள்ளிக் காசுகளைப் பெற்றுக்கொண்டவுடன், இயேசுவுக்குத் தான் இழைத்த துரோகத்தை உணர்கிறான். தன் மீது தான் கொண்ட அன்பே சாத்தானுக்கான அப்பம் என்பதையும் புரிந்து கொள்கிறான். தனக்குள் இயேசுவின் மீதான அன்பு பெருகி அலைமோதிக் கரைகிறான். சாத்தான் விலகுகிறது. இங்கு சாத்தான் என்பதுவும் துர்குணத்தின் குறியீடே.
தன்னுடைய துர்குணத்தை உணர்ந்துகொண்ட மறுகணமே தான் சம்பாதித்த முப்பது வெள்ளிக்காசுகளை வீசி எறிந்துவிட்டுத் தன்னை மாய்த்துக் கொள்கிறான். இயேசு கிறித்து சிலுவையில் தொங்கி அனுபவிக்கப் போகும் வேதனைகளைக் காண்பதற்கு உண்மையில் யூதாசுக்கு வலிமை இருக்கவில்லை. எனவேதான் இயேசுவின் மீதான அவனுடைய அன்பு, அவரது பிற சீடர்களைக் காட்டிலும், இன்னும் சொல்லப் போனால், அவரது அன்னை மரியாளைக் காட்டிலும் மிகுதியானது.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..