கவிஞர்களின் பணியகம்

பெல்கியத்துக்கு வந்த ஆரம்பத்தில் இங்கே எந்த ஊருக்குச் சென்றாலும் ஆங்காங்கே "POETSBUREAU" இருப்பதைக் கண்டு வியந்தேன். டச்சு/ஃபிளம்மிய* மொழியில் இரண்டு சொற்களைச் சேர்த்து ஒற்றைச் சொல்லாக்கும் வழக்கம் உண்டு. எல்லா மொழிகளிலும் இந்த வழக்கம் உண்டெனினும், நானறிந்த வரையில் டச்சு மொழியில் அப்படி உருவாக்கப்பட்ட சொற்கள் மிக அதிகம். எளிய உதாரணம்: "Dansschool". "Dans" என்றால் நடனம். "school" (ஸ்கோல்) என்றால் பள்ளி. ஆனால் "Dans School" என்பதை "Dansschool" என்று ஒற்றைச் சொல்லாகத்தான் எழுதுவார்கள்.
இங்கே கல்லூரியில் டச்சு வகுப்புகளுக்கு செல்வதற்கு முன்பு வரை எனக்கு ஒரு சில அடிப்படையான விஷயங்களைத் தவிர வேறு எதுவும் தெரியாது. நான் மேற்சொன்னது போல் இரண்டு சொற்கள் மட்டுமல்ல, நான்கைந்து சொற்களையெல்லாம் சேர்த்து ஒரு சொற்றொடரளவுக்கு நீண்ட சொற்களெல்லாம் உண்டு. இவையனைத்துமே பயன்பாட்டிலுள்ள சொற்கள்.
இன்னொரு முக்கியமான விஷயம், மேற்சொன்ன “Dansschool” என்கிற சொல்லை, “Dans School” என்று பிரித்து எழுதலாகாது. அப்படித்தான் "Poetsbureau" என்கிற சொல்லைப் பிரித்து "Poets Bureau" என்று ஆங்கிலத்தில் நேரடியாக மொழிபெயர்ப்பு செய்து தவறாகப் புரிந்து கொண்டேன். ஃப்ளம்மிய மொழியும் ஆங்கிலத்தைப் போன்றே ஜெர்மானிய மொழி என்பதால் "Poet" என்கிற சொல்லுக்கு "கவிஞர்" என்றே அனுமானித்துக்கொண்டேன். "பரவாயில்லையே. இந்த நாட்டில் கவிஞர்களுக்கெல்லாம் நாடெங்கிலும் இத்தனை பணியகங்களைக் கட்டி வைத்து எழுதுவதை ஊக்கப்படுத்துகிறார்களே." என்று பெருமிதப்பட்டேன். சாரு நிவேதிதா சொல்வது போல உண்மையிலேயே நம் சமூகம் ஒரு ஃபிலிஸ்டைன் சமூகம்தான் என்றும் உறுதிப்படுத்திக்கொண்டேன். மொழியை நன்றாகக் கற்றுக்கொண்டு இந்தப் பணியகங்களுக்குச் சென்று கவிதை எழுதலாம் என்று கனவெல்லாம் கண்டேன்.
ஒருமுறை இதைப் பற்றி பெருமிதத்தோடு என் ஃபிளம்மிய நண்பன் கூனிடம் சொல்லி பெல்கியத்தைப் பாராட்டியபோது, அவன் குபீரென்று சிரித்துவிட்டு, "Poetsen" என்றால் கண்ணாடிகளைத் தேய்த்து சுத்தம் செய்யும் பணி என்று சொன்னான். "உன் வீட்டு ஜன்னல் கண்ணாடிகளைத் துடைக்க வேண்டும் என்றாலோ அல்லது வேறேதேனும் வீட்டுப் பராமரிப்புப் பணிகள் இருந்தாலோ அவர்களிடம் கேட்கலாம். ஒன்றிரண்டு மாதங்களுக்கு முன்னதாகவே தேதி பெற்றுவிட வேண்டும். ஆனால் ஒரு மணிநேரத்துக்கு ஐம்பது யூரோ பக்கம் கேட்பார்கள். ஜாக்கிரதை" என்று அறிவுத்தினான். மேலும், "கவிதை எழுதினால் இந்த ஊரில் ஐந்து சென்டுகூட கிடைக்காது. அவர்களுக்கெல்லாம் பணியகங்கள் எதற்கு?" என்றான்.
இதைக் கேட்டு திடுக்கிட்டு காற்றிறங்கிய பலூனாக புஸ்ஸென்று வேகமாகத் தரையில் மோதி விழுந்தேன். பிறகு என்னையே ஆறுதல்படுத்திக்கொண்டேன். உண்மையில் கவிஞர்களை பணியகங்களுக்குள் அடைத்து வைப்பது என்பது லௌகீகவாசிகளுக்கு ஐந்து சென்டு கொடுப்பது போன்றது அல்லவா. பெரிது கவிஞனின் உலகம். அவனுக்கெதற்கு அலுவலகம்?

*பெல்கியத்தின் வடக்கு பிராந்தியத்தில் பேசப்படும் டச்சு மொழி "ஃபிளம்மியம்" என்றே அழைக்கப்படுகிறது. ஆனால் தவறிக்கூட அவர்களை டச்சுக்காரர்கள் என்று அழைத்து விடாதீர்கள். அவர்கள் தங்களை “ஃப்ளம்மியர்கள்” என்றே பெருமையுடன் அழைத்துக் கொள்ள விரும்புகிறார்கள். பண்பாட்டு ரீதியாகவும் ஃப்ளம்மியர்களுக்கும் டச்சுக்காரர்களுக்கும் பெரிய இடைவெளியுண்டு.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..