சாயலி இலக்கியம்

ஐந்து வருடங்களுக்கு முன்பு சென்னை புத்தகக் கண்காட்சியில் அகநாழிகை அரங்கில் என்னுடைய சிறுகதைத் தொகுப்பை வெளியிடுவதற்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடனை அழைத்திருந்தார் பொன் வாசுதேவன். அவருக்காகக் காத்துக்கொண்டிருந்த போது அப்போதைய இளம் எழுத்தாளர் ஒருவர் என்னிடம் வந்து, "சிறுகதைத் தொகுப்பா?" என்று வினவினார்.
"ஆமாம்" என்று கூறிவிட்டு புத்தகத்தை அவரிடம் கொடுத்தேன்.
"கவிதைத் தொகுப்பு எதுவும் வெளியிடவில்லையா?" என்றார்.
"நான் கவிஞனில்லை. எழுத்தாளனே இல்லை. இதுவே ஒரு விபத்துதான்" என்றேன்.
"முதலில் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுவிட்டு பிறகு சிறுகதைத் தொகுப்பை வெளியிட வேண்டும்" என்று அறிவுறுத்தினார்.
இன்று வரை அந்த அறிவுரையின் தருக்கம் எனக்கு விளங்கவேயில்லை. இந்நேரம் அவர் மூத்த எழுத்தாளராக பதவி உயர்வு பெற்றிருப்பார் என்று நினைத்து, கடந்த தேர்தலின் போது அவரது முகநூல் பக்கத்தைப் பார்த்தேன். நன்றாக எழுதக்கூடிய அவரொரு மிகப் பெரிய சாயலி (meme) எழுத்தாளராகியிருப்பதைப் பார்த்து பிரமித்துப் போனேன். அத்தனையும் அவதூறுப் பிரச்சார சாயலிகள்.
நானும் நிறைய சாயலிகளை உருவாக்குவதுண்டு. ஆனால் நண்பர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்வேன். தமிழ் திரைப்படங்களை சதா திட்டிக்கொண்டே இருக்கும் காத்திரமான விமர்சகர்கள் சாயலிகளை உருவாக்குவதற்கு மட்டும் தமிழ் திரைப்படங்களிடம் தஞ்சமடைவார்களே, நான் அந்தப் பாசாங்கெல்லாம் செய்ய மாட்டேன். ஒருவேளை அகோரிகள் போன்று அவ்வப்போது கீழிறங்கி வருவதற்கு இதையெல்லாம் செய்யகிறார்களோ என்னவோ. கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்களே. எனக்கு நாவடக்கம் தேவை. ஆத்மாநாம் கேட்டது போல் “நமக்கேன் வம்பு”. எப்படி இருப்பினும் இனிமேல் நிறைய சாயலிகளை உருவாக்கலாமென்று முடிவெடுத்திருக்கிறேன். ஆனால் அவை எந்த இலக்கிய வகைமையில் வரும் என்கிற சந்தேகம் இருந்ததால் என் பத்து வயது மகனிடம் நேற்று மாலை உணவருந்தும் போது அதைப்பற்றிக் கேட்டேன். "என்னப்பா காமெடி பண்ற. மீம்ஸ் விஷுவல் மொழி. அதை இலக்கியத்திலெல்லாம் சேர்க்க முடியாது" என்று உறுதியாகக் கூறிவிட்டான்.
இந்தப் பொடியன் பெரியவர்களை எவ்வளவு ஏளனப்படுத்துகிறான். இருந்தாலும் தமிழ் இலக்கியவாதிகள் தங்கள் இருபதனாயிரம் குழுக்களில் ஏதேனும் ஒரு குழுவில் இதுபற்றி கலந்தாலோசித்து ஏற்கனவே முடிவெடுத்து விட்டார்களா என்பதைக் கேட்டறிய வேண்டும்.
அதே போல் இன்னொரு இலக்கிய வகைமையையும் கருத்தில் கொள்ள விரும்புகிறேன் - "மின்னல் விமர்சனங்கள்" (I call it flash criticism or flash reviews). அதாவது ஒரு கலைப் படைப்பைப் பற்றி ஒற்றை வரியில் விமர்சனம் செய்து விடலாம். அதைக் கொண்டே படைப்பின் சாரத்தை பருகி ரஸ சித்தி பெற்று விடும் அளவுக்கு தேர்ந்த வாசகர்களைக் கொண்ட சூழல் நமக்கு வாய்த்திருப்பதை எண்ணி நாம் உண்மையில் பெருமைப்பட வேண்டும்.
"விமர்சனங்கள் என்பவை உளிகளைப் போன்றவை" என்று என்னுடைய "குழந்தைகளுடன் உரையாடல்" காணொளியில் பேசியிருந்தேன். அது குழந்தைகளுக்கு மட்டுமன்று. திறமை வாய்ந்த இளம் படைப்பாளிகளுக்காகவும்தான். ஒரு நல்ல சிற்பி, சிலையாகும் சாத்தியமுள்ள கற்களைத் தேர்ந்தெடுத்து செதுக்க ஆரம்பிப்பான். அப்படி உருவாகி வரும் சிலையின் மூக்கையும் காதையும் உடைக்கும் நோக்கில் சிற்பிகள் போர்வையில் சிலர் வரக் கூடும். அவர்களிடம் சற்று கவனம் தேவை.
தம் அறிவுஜீவித்தனத்தை சதா காட்டிக்கொண்டே இருக்கும் விமர்சகர்கள் இன்னொரு வகை. அவர்களின் அறிவு நமக்கு நிச்சயம் தேவை. ஆனால் மந்திரவாதிகளைப் போன்றவர்கள் அவர்கள்.
அத்தகையவர்களிடமிருந்து நமக்கு வேண்டியதை எடுத்துக் கொள்வது என்பது மாயக் குகைக்குள்ளிருந்து அலாவுதீன் அற்புத விளக்கை எடுக்கச் செல்வது போன்றது. பாம்புகளும் தேள்களும் நம்மைக் கொட்டி விடாமல் அதீத கவனத்துடன் சென்று விளக்கை எடுத்துப் பயனடைய வேண்டும்.
ஆனால் அதைவிடச் சிறந்த வழி ஒன்று இருக்கிறது. கலையின் மீதும், நம் மீதும் உண்மையான அக்கறை கொண்ட அறிவுஜீவிகள் பலர் இருக்கிறார்கள். அல்லாவைப் போன்றவர்கள் அவர்கள். அவர்களைச் சரணடைந்து அதே அற்புத விளக்கை பெற்றுக் கொள்வதே அறிவுள்ள இளைஞன் செய்யக் கூடியது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..