மோரைப் பெருக்கி மாங்காயை நசுக்கி கடலையை ..?


சிறுவயதில் கோடை விடுமுறைக்கு ஏலகிரி மலைக்கருகேயுள்ள எங்கள் பாட்டி வீட்டுக்குச் சென்றுவிடுவது வழக்கம். கொண்டாட்டமாகக் கழிந்த நாட்கள் அவை.  
வீட்டுக்கு அண்மையில் இருக்கும் தென்னந் தோப்பில் நண்பர்களோடு ஆட்டம் போட்டது, மாமரம் மீது ஏறிக் காரோட்டி மகிழ்ந்தது, கிப்ளிங்கின் ஜங்கிள் புக் வாசித்து விட்டு அதன் தாக்கத்தில் பல்கலை வித்தகரான சின்னத் தாத்தாவிடம் பூமராங் செய்து கொடுக்கச் சொல்லி அதை வீசியெரிந்து விளையாடியது, காய்ந்த பனையோலையையும் சோளத் தட்டையும் கொண்டு காற்றாடி செய்து அதைத் தூக்கிக்கொண்டு ஓடியது, செங்கற்களைக் கொண்டு கார் ரேஸிங் விளையாடியது, புளிய மரத்தில் ஊஞ்சல் கட்டி மாமாக்களை ஆட்டச் சொல்லியது, அதே புளிய மரத்துக்கு அடியில் கயிற்றுக் கட்டிலில் உறங்கியது, உறங்கியெழுந்து பசிக்கு அம்மியில் நசுக்கிய மாங்காயுடன் சுவையான கம்பங்கூழ், தாகத்துக்கு இளநீர், நொறுக்குத் தீனியாக தோட்டத்திலிருந்து பச்சைக்கடலை பறித்து வயலில் ஓடும் தண்ணீரில் கழுவி உண்டது, உண்டி வில் செய்து கொய்யா, கோணக்காய்களைப் பறித்தது, பம்புசெட்டில் பீய்ச்சி அடிக்கும் தண்ணீரில் தெம்பாய் நனைந்து வயலுக்குள் பாம்பாய் தெறித்து ஓடும் தண்ணீரில் நீந்தியது, தண்ணீர் சொட்டச் சொட்ட ஓடிவந்து கிணற்றில் குதிப்பது, பானைகளைக் கொண்டு வெஸ்டர்ன் டாய்லட் செய்தது, தோட்டத்தில் விளைந்த தக்காளி, கொத்தமல்லி மூட்டைகளுடன் கோடியூர் சந்தைக்கு தாத்தாவுடன் சென்றது, மாமாக்கள் தாத்தாவுக்கு எழுதிய கடிதங்களை அவருடன் அமர்ந்து வாசித்தது, ஒவ்வொரு கடிதத்துக்கும் பின்னாலிருந்த கதையை அவர் சொன்னது, மாலைவேளைகளில் ரோட்டோரக் கடைகளிலிருந்து அவர் வாங்கி வரும் போண்டாக்களை தேநீருடன் உண்டது, சாமியாடி ஓடும் மாமாவுடன் இரவெல்லாம் நிமிடங்கூட தூங்காமல் பூங்கரகம் எடுத்து சிலம்பம் ஆடியது என்று மரித்த தினங்களின் நினைவுகள் அத்தனையும் உயிர்தெழுந்து சித்திரங்களைப் போன்று ஒவ்வொன்றாய் நேற்று மனக்கண் முன்னால் ஓடியது.
அதற்குக் காரணம் இந்தப் புகைப்படம். ஆம், இதுவே நேற்றைய என் மதிய உணவு. கடந்த இரண்டு வாரங்களாகவே இங்கு நல்ல வெயில் என்பதால் மோர்க் கஞ்சிதான் என் மதிய உணவாக இருக்கிறது. அப்போதெல்லாம் தேரையர் சொன்னபடி மோரைப் பெருக்கி குட்டி பானைகளில் ஊற்றி வைப்பாள் என்னுடைய பாட்டி. அதை சொம்புகளில் ஊற்றி எடுத்துக்கொண்டு தோட்டத்துக்குச் சென்று கொத்தமல்லி இலைகளையும், பச்சைக் கடலையையும் பறித்து வாய்க்காலில் ஓடும் நீரில் கழுவி மோரில் போட்டு வயலிலேயே அமர்ந்து சாப்பிடுவோம். மோரும் பச்சைக்கடலையும் சுவையானதொரு காம்பினேஷன். அதே போல், அம்மியில் மிளகாயுடன் சேர்த்து நசுக்கிய மாங்காயுடனான கம்பங்கூழை நினைத்துப் பார்த்து இதை எழுதிக்கொண்டு இருக்கும் போதே நாவில் எச்சில் ஊறுகிறது. கூழிலும் கடலை சேர்த்து சாப்பிடலாம். சின்ன வெங்காயம் இருந்தால் சுவை கூடும். 
இப்படியாகப் பட்டியலிட்டுக் கொண்டு போனால் இதற்கு முடிவேயில்லை. திருமணம் ஆன புதிதில் நான் உண்பதையெல்லாம் பார்த்துவிட்டு, "நீ ஒரு சரியான பட்டிக்காட்டான்" என்றாள் ப்ரியா. உண்மைதான். இன்றளவும் அப்படித்தான். இல்லாவிட்டால் நானே உருவாக்கியுள்ள "நிறுவனங்களில் பழங்குடி மனநிலை" என்கிற கருத்தாக்கத்தை நிர்வாக அதிகாரிகளுக்கும் சொல்லிக் கொடுக்க முடியுமா? என்னளவில் பழங்குடி மனநிலையையும், குழந்தைமையையும் விட்டுவிடுவது என்பது மரணத்தைத் தேர்ந்தேடுப்பதற்குச் சமம். மற்றபடி இந்தியாவின் ஏதோவொரு குக்கிராமத்தில் கூழ் குடிப்பதுவும், ஐரோப்பாவில் ஏதோவொரு கருத்தரங்கினிடையே அறிவுஜீவிகளுடன் ஷாம்பெய்ன் அருந்துவதும் எனக்கு ஒன்றுதான். என் நடை உடை பாவனைகளை நிச்சயம் மாற்றிக் கொள்ளமாட்டேன். புதன்கிழமையன்றுகூட ஒரு சர்வதேச இணையவழிக் கருத்தரங்கில் தலையில் மணிக்குட்டை கட்டிக்கொண்டுதான் கலந்துகொண்டேன். இந்த ஆளுமை மேம்பாட்டு வகுப்புகளில் பயின்றதையெல்லாம் எந்தக் காலத்திலும் நான் கடைப்பிடிப்பதில்லை. மாறாக அவற்றை ஏன் உதாசீனப்படுத்த வேண்டும் என்று வகுப்புகள் எடுத்துக்கொண்டிருக்கிறேன். 
விஷயத்துக்கு வருவோம். நேற்றைக்கு ப்ரியா கம்பங்கூழ் செய்திருந்தாள். பச்சைக்கடலை இங்கு கிடைப்பதில்லை. ஆனால் அதற்கும் ஒரு வழியைக் கண்டுபிடித்து விட்டேன். உங்களுக்கும் என் கண்டுபிடிப்பைச் சொல்கிறேன். காப்புரிமை எதுவும் பெறவில்லை. யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும் என்பதே தமிழர் பண்பாடு. காய்ந்த கடலையை வாங்கி முந்தைய நாளிரவே தண்ணீரில் ஊறவைத்து விட்டு, மறுநாள் மோரில் சேர்த்துக் குடித்துப் பாருங்கள். அதே சுவை. அதே சுவை. காய்ந்த கடலையை பச்சைக் கடலையாக்கும் வித்தை இது. "மோரைப் பெருக்கி மாங்காயை நசுக்கி கடலையை ஸோக்கி" உண்ண வேண்டும் என்பது மாதவச் சித்தன் வாக்கு. ஆனால் அம்மியில் நசுக்கிய மாங்காய்க்கு நான் எங்கே போவேன் நண்பர்களே. முற்றடைப்பால் கறிவேப்பிலைகூட கிடைப்பதில்லை. ஒருவேளை நான் இந்தியாவுக்கு நாளையே திரும்ப முடிவெடுத்தால் அதற்கான பிரதான காரணங்களாக மாங்காயும், தேங்காயும், நிலக்கடலையுமாக இருக்கும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..