மேரி ஓவர்லை

பின்நவீனத்துவ நாடகப் பயிற்சியாளர் மேரி ஓவர்லை காலமானார். நிகழ்த்துக்கலை தத்துவ உலகில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய "ஆறு நோக்குநிலைகள்" கோட்பாடு அவர் உருவாக்கியதுதான். அதை வெறும் கோட்பாடாக விட்டு விடாமல் நடைமுறைப்படுத்திக் காட்டியவர். நாடக உலகில் அவரை அசலான அராஜகவாதி என்று அழைக்கிறார்கள். என்னுடைய ஆசான் அவரை மகாராணி என்பார். 

அவருடைய மறைவைப் பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை என்பது ஒன்றும் வியப்பில்லை. அவர் அப்படி வாழ்ந்தவர்தான். வெளிச்சத்துக்கு வர என்றுமே அவர் விரும்பியதில்லை. அதனால் தன்னுடைய கருத்துக்கள் மறைக்கப்பட்டு விடும் என்கிற கவலை அவருக்கு இருந்ததில்லை. படைப்பின் மீது நம்பிக்கைக் கொண்ட அசலான கலைஞர்கள் அப்படித்தான். நிறைகுடங்கள் தளும்புவதில்லை. குறைகுடங்களின் தளும்பல்களைத்தான் அன்றாடம் பார்க்கிறோமே.இடைவெளி, வடிவம், உணர்ச்சி, இயக்கம், காலம், கதை ஆகிய ஆறு புலனுணர்வு மொழிகளையும் ஒவ்வொரு நிகழ்த்துக் கலைஞனும் நன்றாகக் கையாளத் தெரிந்தவனாக இருக்க வேண்டும். இவற்றையெல்லாம் நேரடியாகப் பொருள் கொள்ளக்கூடாது. விரிவாகப் பிறகு எழுதுகிறேன். இந்த ஆறு நோக்குநிலைகள் பயிற்சிக்குள் நுழைவதற்கு முன்பு மரபார்ந்த நடிப்புப் பயிற்சி மேற்கொள்வது அவசியம். மரபார்ந்த பயிற்சியில் கலைஞனை ஒரு படைப்பாளியாக, காரணபுருஷனாக வரையறை செய்து பயிற்சியளிப்பார்கள். ஆனால் அதற்கு நேர்மாறாக ஆறு நோக்குநிலைகளில் கலைஞனை ஒரு பார்வையாளனாக, பங்கேற்பாளனாக வரையறை செய்து பயிற்சியளிக்கிறார்கள்.

நாடகக் கல்விமுறையில் தனித்துவமிக்க, புரட்சிகர மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கிறார் மேரி ஒவர்லை. நடிகர்கள் மட்டுமல்ல என்னைப் பொறுத்தவரையில் எல்லோருமே இத்தகைய நடிப்புப் பயிற்சியில் ஈடுபட வேண்டும். "நானாட்டி ப்ரதுக்கு நாடகமு" என்கிற அன்னமாச்சார்யாவின் தெலுங்குக் கீர்த்தனை எனக்கு மிகவும் பிடித்தமானது. அதையே இந்நாளில் மேரிக்காகப் பாட விரும்புகிறேன். வாழ்க்கையே நாடகம். அதில் நாமனைவருமே நம்மை படைப்பாளிகள் என்றும், தோற்றுவிப்பவர்கள் என்றும் எண்ணிக் கொண்டு ஆணவத்துடன் நடந்துகொண்டிருக்கிறோம். ஆனால் உண்மையில் நாம் வெறும் பார்வையாளர்கள்; பங்கேற்பாளர்கள் மட்டுமே.

6 ஜூன் 2020

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..